பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1508 

அணிந்த மாலையையும் அரிய நீர் கவர்ந்ததால்; உடுத்த பட்டு அஞ்சி ஒளிப்ப - (அதனைக் கண்டு ) அவள் உடுத்த பட்டு அஞ்சி மறைய; ஒண் மேகலை ஒன்றும் பேசா கிடப்ப - சிறந்த மேகலை ஒன்றும் பேசாது கிடப்ப; அரசன் நோக்கி - அரசன் பார்த்து; உன் துகில் கெட்டது என்ன - உன் ஆடை காணாமற் போயிற்று என்ன; மடத்தகை நாணிப் புல்லி - இளந்தகையாள் வெள்கித் தழுவ; மின்னுச் சேர் பருதியொத்தான் - மின்னற் கொடி தழுவிய ஞாயிறு போன்றான்.

   (வி - ம்.) பட்டு நனைந்தபடியே மெய்ம்முழுதுந் தோன்றும்படி ஒட்டிக்கொண்டதாற் 'பட்டொளிப்ப' என்றார்.

( 68 )
2667 விம்மகிற் புகையின் மேவி
  யுடம்பினை வேது செய்து
கொம்மென நாவி நாறுங்
  கூந்தலை யுலர்த்தி நொய்ய
வம்மல ருரோமப் பூம்பட்
  டுடுத்தபி னனிச்ச மாலை
செம்மலர்த் திருவி னன்னார்
  சிகழிகைச் சோ்த்தி னாரே.

   (இ - ள்.) விம்மு அகில் புகையின் மேவி - மிகுகின்ற அகிற் புகையிலே பொருந்தி; உடம்பினை வேது செய்து - உடம்பிற்கு வெப்பம் ஊட்டி; கொம் என நாவி நாறும் கூந்தலை உலர்த்தி - விரையக் கத்தூரி கமழும் கூந்தலைக் காய வைத்து; அம்மலர் உரோமப் பூம்பட்டு உடுத்தபின் - அழகிய மலர் வேலை செய்த எலிமயிர்ப் பட்டை உடுத்தபின்; செம் மலர்த் திருவின் அன்னார் - செவ்விய தாமரையில் உள்ள திருமகளைப்போன்றவர்; சிகழிகை அனிச்சம் மாலை சேர்த்தினார் - மயிர் முடியிலே அனிச்ச மலர்மாலை அணிந்தனர்.

   (வி - ம்.) விம்மகிற்புகை : வினைத்தொகை. கொம்மென:   விரைவுக் குறிப்பு. நாவி - கத்தூரி. மலர் உரோமப் பூம்பட்டு - பூவேலை செய்யப்பட்ட மயிரும் பட்டுங் கலந்தியற்றிய அழகிய ஆடை என்க. சிகழிகை - மயிர்முடி.

( 69 )

3இருது நுகர்வு

வேறு

2668 கார்கொள் குன்றன கண்கவர் தோளினா
னீர்கொ ணீரணி நின்று கனற்றலின்
வார்கொண் மென்முலை வம்பணி கோதையா
ரோ்கோள் சாயலுண் டாடுமற் றென்பவே.