பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1509 

   (இ - ள்.) நீர்கொள் நீர் அணி நின்று கனற்றலின் - (மங்கையரின்) நீர்மைகொண்ட நீர்க்கோலம் உள்ளத்தே நின்று அழற்றலின்; கார்கொள் குன்று அன கண்கவர் தோளினான் - கார்காலத்திலே குன்றைப்போலக் கண்ணைக் கவரும் தோளினான்; வார்கொள் மென்முலை வம்பு அணி கோதையர் - கச்சினால் இறுக்கிய மெல்லிய முலையிலே மணந்தரும் கலவைச் சாந்தணிந்த மகளிரின்;  ஏர் கொள் சாயல் உண்டு ஆடும் - அவர்தம் அழகு கொண்ட மென்மையை முன்னர்க் கண்ணாலே நுகர்ந்து, பின்னர் அவர்களுடன் விளையாடுவான்.

   (வி - ம்.) ஆடும் : எதிர்காலம்; மேற் கூறப்படும் ஆறு காலத்தினும் விளையாடுவான்.

( 70 )

முதுவேனில்

2669 வேனில் வாய்க்கதிர் வெம்பலின் மேனிலைத்
தேனு லாங்குளிர் சந்தனச் சேற்றிடைத்
தானு லாய்த்தட மென்முலைத் தங்கினான்
பானி லாக்கதிர் பாய்தரு பள்ளியே.

   (இ - ள்.) வேனில் வாய்க் கதிர் வெம்பலின் - முதுவேனிற் காலத்திலே ஞாயிறு கொதித்தலின்; மேல்நிலைத் தேன் உலாம் குளிர் சந்தனச் சேற்றிடை - (அதற்காற்றாமல்) மேல் நிலத்திலே தேக்கிய வண்டுகள் உலாவும் குளிர்ந்த சந்தனச் சேற்றில்; தான் உலாய் - அவன் உலாவி; பால் நிலாக் கதிர் பாய்தரு பள்ளி - பால் போன்ற நிலவின் கதிர் பாய்கின்ற பள்ளியிலே; மென் முலைத்தடம் தங்கினான் - மென் முலையாகிய தடத்திலே தங்கினான்.

   (வி - ம்.) கார்காலத்தைக்கொண்ட குளிர்ந்த குன்று என்றவாறு. தோளினான் : சீவகன். நீர் - நீர்மை. உள்ளத்தே நின்று என்க. வார் - கச்சு. வம்பு - மணம். ஏர் - எழுச்சி.

( 71 )
2670 முழுது மெய்ந்நல மூழ்கலி னீர்சுமந்
தெழுது கண்ணிரங் கப்புரு வக்கொடி
தொழுவ போன்முரி யச்சொரி பூஞ்சிகை
யழுவ போன்றணி நித்தில முக்கவே.

   (இ - ள்.) மெய்ந்நலம் முழுதும் மூழ்கலின் - (அவன் அவர்களின்) உடல் நலமாகிய தடத்தே முழுவதும் மூழ்கலின்; எழுதுகண் நீர் சுமந்து இரங்க - மையெழுதிய கண்கள் (அதற்கஞ்சி) நீரைச் சுமந்து இரங்காநிற்க; புருவக் கொடி தொழுவபோல் முரிய - புருவமாகிய கொடி (நீ வருத்தினை என்று)