பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1510 

தொழுவனபோல வளையாநிற்க; பூஞ்சிகை அணி நித்திலம் அழுவ போன்ற உக்க - மலரையுடைய கூந்தலில் அணிந்த முத்துக்களை அக் கூந்தல் அழுவன போலச் சிந்தின.

   (வி - ம்.) நலமாகிய குளத்தில் என்க. எழுதுகண் : வினைத்தொகை; மையெழுதிய கண்ணென்க. புருவமாகிய கொடியென்க. நித்திலம் - முத்து.

( 72 )
2671 எழுத்தின் பாடலு மாடலு மென்றிவை
பழத்த கற்பகப் பன்மணிக் கொம்பனா
ரழுத்தி யன்ன வணிவளைத் தோண்மிசைக்
கழிக்கு மைங்கணைக் காமற்குங் காமனே.

   (இ - ள்.) ஐங்கணைக் காமற்குங் காமன் - ஐங்கணையுடைய காமனையும் வருத்துகின்ற காமன்; எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை - எழுத்தின் வடிவு தோன்றும் பாட்டையும் கூத்தையும் (கேட்டும் கண்டும்); பழுத்த கற்பகப் பன்மணிக் கொம்பு அனார் - கனிந்த, கற்பகத்தின் பல்மணிகளையுடைய கொம்பு போன்ற மகளிரின்; அணி வளை அழுத்தி அன்ன தோள்மிசை - அழகிய வளையை அழுத்தினாற்போல அணிந்த தோளிலே; கழிக்கும் (முதுவேனிலைக்) கழிப்பான்.

   (வி - ம்.) எழுத்தாலாய பாடல் என்க. ஆடல் - கூத்து. பாடலும் ஆடலும் என்பதற்கேற்பக் கேட்டும் கண்டும் என்க.

( 73 )

கார்

2672 நீர்து ளும்பு வயிற்றின் னிழன்முகில்
பார்து ளும்ப முழங்கலிற் பல்கலை
யோ்து ளும்ப வெரீஇயிறை வற்றழீஇக்
கார்து ளும்புகொம் பிற்கவி னெய்தினார்.

   (இ - ள்.) நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில் - நீர் அசையும் வயிற்றையுடைய ஒளி பொருந்திய முகில்; பார் துளும்பு முழங்கலின் - நிலம் அசைய முழங்குவதாலே; பல்கலை ஏர் துளும்ப வெரீஇ - பல மணிகளையுடைய மேகலையின் அழகு அசைய அச்சம் உற்று; இறைவன் தழீஇ - அரசனைத் தழுவி; கார்துளும்பு கொம்பின் கவின் எய்தினார் - கார்காலத்தே அசையும் கொம்புபோல அழகுற்றனர்.

   (வி - ம்.) துளும்புதல் நான்கும் அசைதல் என்னும் ஒரே பொருளன். பார்- நிலம். ஏர் - அழகு. வெரீஇ - வெருவி - அஞ்சி. இறைவன் : சீவகன். தழீஇ - தழுவி. கவின் - அழகு.

( 74 )