பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1514 

தோய்ந்தது; மங்கை! - மங்கையே!; நின் மனத்தினால் வருந்தல் - நின் உள்ளத்தினால் வருந்தாதே; என்று - என்றுரைத்து; அவள் பொங்கு இள வனமுலை பொருந்தினான் - அவளுடைய விம்மும் இளமுலைகளைத் தழுவினான்.

   (வி - ம்.) மதி அழகு நீங்கித் தேய்ந்தது என்றதனால், அது நினக்கு ஒப்பாகாது என்றும் ஒப்பாகாதவருடன் பகைப்பது அறமன் றென்றுங் குறினானாயிற்று.

( 81 )

முன்பனி

வேறு

2680 கொங்கு விம்முபூங் கோதை மாதரார்
பங்க யப்பகைப் பருவம் வந்தென
வெங்கு மில்லன வெலிம யிர்த்தொழிற்
பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்.

   (இ - ள்.) கொங்கு விம்மு பூங்கோதை மாதரார் - மணம் விம்மும் மலர் மாலையணிந்த மாதர்கள்; பங்கயப் பகைப்பருவம் வந்தென - தாமரைக்குப் பகையாகிய பனிப்பருவம் வந்ததாக; பொங்கு பூம்புகை - பொங்கும் பொலிவுறு புகையூட்டிய; எலி மயிர்த் தொழில் - எலிமயிரால் தொழில் செய்யப்பட்ட; எங்கும் இல்லன போர்வை மேயினார் - எங்கும் இல்லனவாகிய போர்வையை விரும்பிப் போர்த்தினர்.

   (வி - ம்.) கொங்கு - மணம். பங்கயம் - தாமரை; பங்கயத்திற்குப் பகையாகிய பருவம் என்க; அது. பனிப்பருவம். வந்தென - வந்ததாக. எங்கும் - பிறநாட்டின்கண் எவ்விடத்தும் என்க.

( 82 )
2681 கூந்த லின்புகைக் குவவு மென்முலைச்
சாந்த மேந்திய தமால மாலையு
மாய்ந்து தாங்கின ரரவ மேகலை
காய்ந்து நித்திலங் கடிய சிந்தினார்.

   (இ - ள்.) கூந்தல் இன் புகை - கூந்தலிலே இனிய புகையையும்; சாந்தம் ஏந்திய மென்முலை - (முன்னர்ச்) சந்தனந் தாங்கிய திரண்ட மெல்லிய முலைகளிலே; தமால மாலையும் - பச்சிலையால் தொடுத்த மாலையையும்; ஆய்ந்து தாங்கினார் - (பனிக் காலத்திற்குத் தக) ஆராய்ந்து அணிந்தனர்; அரவம் மேகலை காய்ந்து - ஒலி தரும் மேகலையை நீக்கி; நித்திலம் கடிய சிந்தினார் - முத்துக்களை விரைய நீக்கினார்.

   (வி - ம்.) பனிக் காலத்திற்கு மேகலையும் முத்தும் சந்தனமும் ஆகாவென நீக்கினார். தமாலம் - பச்சிலை மரம்.

( 83 )