பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1516 

   (இ - ள்.) பொன் பனிப்பு உறும் பொற்பினார் நலம் - திரு மகளும் வருந்தும் அழகினார் நலம்; அன்பன் இத்தலை அணங்க - அன்பனை இக்காலத்தே வருத்துதலால்; அத்தலை - அதனுடன்; முன்பனித்தலை முழுதும் நீங்கிப் போய் - முன்பனிக் காலம் முழுதும் நீங்கிப்போய்; பின் பனித்தலை பேண வந்தது - பின் பனிக் காலம் (அவர்கள்) எதிர்கொள்ளும்படி வந்தது.

   (வி - ம்.) பொன் - திருமகள். பனித்தல் - இவர் அழகிற்கு ஒவ்வேமென்று வருந்துதல், பொற்பு - பொலிவு. அன்பன் : சீவகன். முன்பனி பின்பனி என்பன பருவங்கள். ஈரிடத்தும் தலை என்பது காலம் என்னும் பொருள் குறித்தது.

( 86 )
2685 வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க்
கள்செய் மாலையார் கண்கொ ளாத்துகி
லள்ளி யேந்திய வரத்த வல்குலா
ரொள்ளெ ரிம்மணி யுருவப் பூணினார்

   (இ - ள்.) வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர் - வெள்ளி லோத்திரத்தினது விளங்கும் வெண்லராற் செய்த; கள்செய் மாலையார் - தேன் பொருந்திய மாலையினார்; அரத்தம் அள்ளி ஏந்திய கண்கொளாத் துகில் - செந்நிறத்தை வாரிக் கொண்டு, கண்ணாற் காணவியலாத மெல்லிய துகிலை; அல்குலார் - அணிந்த அல்குலினார்; ஒள்எரி மணி உருவப் பூணினார் - சிறந்த ஒளி வீசும் மணியாலாகிய அழகிய அணியினார்.

   (வி - ம்.) அடுத்த செய்யுளுடன் தொடரும். அரத்தந் தோயாமல் இயல்பான செந்நிறமுடைய துகில் 'கோபத் தன்ன தோயாப் பூந்துகில்' (முருகு.15), 'அரத்தத்தை அள்ளி ஏந்திய அல்குல்' என்றும் உரைப்பர்.

( 87 )
2686 செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி
ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பல
மன்ன ருய்ப்பன மகிழ்ந்து தாங்கினா
ரென்ன ரொப்புமில் லவர்க ளென்பவே.

   (இ - ள்.) செந்நெருப்பு உணும் செவ்வெலி மயிர் - சிவந்த நெருப்பை யுண்ணும் சிவந்த எலியின் மயிராலாகிய; அந்நெருப்பளவு ஆய்பொன் கம்பலம் - அந்த நெருப்பின் அளவு வெம்மைய என்று ஆராய்ந்த பொலிவினையுடைய கம்பலம்; மன்னர் உய்ப்பன - அரசராற்றிறையாகக் கொண்டுவரப்பட்டன வாய் உள்ளவற்றை; என்னர் ஒப்பும் இல்லவர்கள் - எத்தன்மையரும் ஒப்புமையில்லாதவர்களாகிய அம் மகளிர்; மகிழ்ந்து தாங்கினார் - விரும்பி அணிந்தனர்.