பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1522 

   (வி - ம்.) அகை - கூறுபாடு. 'சூழ்ந்து தகை' என்பது விகாரப் பட்ட தெனினும் ஆம்.

   புகை - நறுமணப் புகை. பொன்னங்கலை - பொன்னாலியற்றிய அழகிய மேகலையணி. கவுள - கவுளையுடையன, நாப்போன்ற சிறிய அடி என்க. சுமாஅய் - சுமத்தி. கண்பின் பரூஉக் காம்பு - இரண்டு கணுக்களுக்கும் பின்னாகிய பரிய தண்டு.

( 96 )
2695 பிடிக்கை வென்று கடைந்தனபோற்
  பஞ்சி யார்ந்த திரள் குறங்கு
கடித்துக் கிடந்து கவின்வளருங்
  காய்பொன் மகரங் கதிர்முலைமே
லுடுத்த சாந்தின் மிசைச்செக்க
  ரொளிகொண் முந்நாட் பிறையேய்ப்பத்
துடிக்குங் குதிர் சோ் துணைமுத்தந்
  திருவில் லுமிழ்ந்து சுடர்ந்தனவே.

   (இ - ள்.) பிடிக்கை வென்று கடைந்தனபோல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு - பிடியின் கையை வென்று, கடைந்தன போலப் பஞ்சியூட்டிய திரண்ட துடையினை; கடித்துக் கிடந்து கவின் வளரும் காய்பொன் மகரம் - கவ்விக் கிடந்து அழகு வளரும் உருக்கிய பொன்னால் மகரவடிவாகச் செய்யப்பட்ட குறங்குசெறியென்னும் அணியும்; கதிர்முலைமேல் உடுத்த சாந்தின்மிசை - ஒளிரும் முலைமேற் பூசிய சாந்தின்மேல்; செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப - செவ்வானிலே ஒளிவீசும் முந்நாட் பிறைபோல; துடிக்குங் கதிர்சேர் துணைமுத்தம் - கிடந்தசையும் ஒளி பொருந்திய இரண்டு வடமான முத்துமாலையும்; திருவில் உமிழ்ந்து சுடர்ந்தன - வானவில்போல ஒளியுமிழ்ந்து கிடந்தன.

   (வி - ம்.) குறங்கு செறியும் முத்துமாலையும் கிடந்தன என்க. ஒழுக நோக்குதலின் பிடிக்கையை வென்று, திரட்சியாலும் சருச்சரையின்மை யாலும் பஞ்சியாலும் கடைந்தனபோல் திரண்ட குறங்குகள்.

( 97 )
2696 குழியப் பெரிய கோன்முன்கை
  மணியார் காந்தட் குவிவிரன்மேற்
கழியப் பெரிய வருவிலைய
  சிறிய மணிமோ திரங்கனலத்
தழியப் பெரிய தடமென்றோட்
  சலாகை மின்னத் தாழ்ந்திலங்கும்
விழிகண் மகர குண்டலமுந்
  தோடுங் காதின் மிளிர்ந்தனவே.