பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1524 

   (வி - ம்.) முறுவலின் ஒளி பவளவாயிலே படுதலால், அத்தகைய ஒளியில்லாத கொவ்வைக் கனிகள் தொழுதன.

   'நாணைத் தன்னுள்ளே யடக்கி நகுகின்ற தாலியைப் பழைய நிலையிலே கிடக்கும்படி, பேணி, சுடர்வீசும் மாணிக்கத்தைக் கழுத்திலே அணிந்து' - என இரண்டணிகள் ஆக்குவர் நச்சினார்க்கினியர்.

   தோள் : முதனிலை. தோள் கடல் : வினைத்தொகை. தோள்கடல் நீர்க்கடல் என இயைக்க.

( 99 )
2698 மாலை மகளி ரணிந்ததற்பின்
  பஞ்ச வாசங் கவுட்கொண்டு
சோலை மஞ்ஞைத் தொழுதிபோற்
  றோகை செம்பொ னிலந்திவளக்
காலிற் சிலம்புங் கிண்கிணியுங்
  கலையு மேங்கக் கதிர்வேலு
நீலக் குவளை நிரையும்போற்
  கண்ணார் காவி லிருந்தாரே.

   (இ - ள்.) மகளிர் மாலை அணிந்ததன் பின் - (இவ்வாறுஒப்பனைக்குப்பின்) அம் மகளிர் மாலையையும் குறைதீர அணிந்த பிறகு; பஞ்சவாசம் கவுள் கொண்டு - (வெற்றிலையை) ஐந்து வகையான முகவாசத்துடன் வாயிற்கொண்டு; காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க - காலிலே சிலம்பும் கிண்கிணியும் இடையிற் கலையும் ஒலிக்கவும்; தோகை செம்பொன் நிலம் திவள - கொய்சகம் அழகிய நிலத்தே பட்டுத் துவள; கதிர் வேலும் நீலக்குவளை நிரையும்போற் கண்ணார் - ஒளியுறு வேலும் நீல நிறமுடைய குவளை நிரையும் போன்ற கண்ணார் ஆகிய அவர்கள்; சோலை மஞ்ஞைத் தொழுதிபோல காவில் இருந்தார் - சோலையிடையே உள்ள மயிர் திரள்போலக் காவினிடையே இருந்தனர்.

   (வி - ம்.) மஞ்ஞை - மயில். தொழுதி - கூட்டம். தோகை - கொய்சகம். திவள - துவள. கலை - மேகலை. கா - சோலை.

( 100 )
2699 மணிவண் டொன்றெ நலம்பருக
  மலர்ந்த செந்தா மரைத்தடம்போ
லணிவேன் மன்ன னலம்பருக
  வலர்ந்த வம்பார் மழைக்கண்ணார்
பணியார் பண்ணுப் பிடியூர்ந்து
  பரூஉக்காற் செந்நெற் கதிர்சூடித்
தணியார் கழனி விளையாடித்
  தகைபா ராட்டத் தங்கினார்.