பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1526 

   (வி - ம்.) இம்மலர் வடுப்படுத்தி மோந்தும் இனிய நாற்றத்தவே ஆயினாற்போல, எம்மையும் உகிர் முதலியவற்றாற் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தம் என்று அஞ்சினையாயினும், அஃது எமக்கு மிக்க இன்பமேயாதலின், உனக்கும் இன்பஞ் செய்யும் என்று உணர்த்துதற்குக் கிழித்து மோந்தாரென்க. இளமைச் செவ்வி மிக்கவழி மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பஞ் செய்யும் என்று காமநூலிற் கூறலின், அதனை யீண்டுக் கூறினார். அது, 'காமத்தூழுறு கனியை யொத்தாள்.......வேந்தன் அஞ்சிறைப் பறவை யொத்தான்' (சீவக.192) என முன்னர்க் கூறியவற்றானும் உணர்க.

( 102 )

4. புதல்வர்ப் பேறு

2701 இவ்வா றெங்கும் விளையாடி
  யிளையான் மார்பி னலம்பருகிச்
செவ்வாய் விளர்த்துத் தோண்மெலிந்து
  மணிக்கோல் வள்ளத் தவனேந்த
செய்ய முலையின் முகங்கருகி
  யனிச்ச மலரும் பொறையாகி
யொவ்வாப் பஞ்சி மெல்லணைமே
  லசைந்தா ரொண்பொற் கொடியன்னார்.

   (இ - ள்.) இவ்வாறு எங்கும் விளையாடி - தாம் கருதிய இம் முறையே எங்கும் இருந்து கூடிமகிழ்ந்து ; இளையான் மார்பின் நலம் பருகி - சீவகன் மார்பினைத் தழுவி இன்பம் பருகி; செவ்வாய் விளர்த்து - சிவந்த வாய் விளர்த்து ; தோள் மெலிந்து - தோள் இளைத்து; செய்ய முலையின் முகம் கருகி - சிவந்த முலையின் முகம் கறுத்து; அவ்வாய் வயிறு கால்வீங்கி - அழகு வாய்ந்த வயிறு அடிபருத்து; அனிச்ச மலரும் பொறை ஆகி - அனிச்ச மலரும் சுமையாகி; ஒவ்வாப் பஞ்சிமெல் அணைமேல் - தன் மென்மைக்கு ஒவ்வாத பஞ்சியினால் ஆகிய மெல்லிய அணையின்மேல்; ஒண்பொன் கொடி அன்னார் அசைந்தார் - சிறந்த பொற்கொடி போன்றவர்கள் தங்கினார்கள்.

   (வி - ம்.) இவை கருவுற்ற குறிகள்.

   நச்சினார்க்கினியர் தம் கருத்துக்கிசையக் கூறும் உரை:

   ”அக் கொடியன்னார், தாம் கருதிய இத் தன்மையை எந் நிலத்தினும் இருந்து புணர்ந்து, அக் கருத்து முற்றிய பினனர் மகப்பேற்றை விரும்பி, இவனைப்போலும் புதல்வரைப் பெற வேண்டும் என்று அவன் வடிவழகையெல்லாம் உட்கொண்டு புணர்ந்து கருப்பம் தங்குதலாலே, விளர்த்து, மெலிந்து வயாநோய் செய்து விடுகையினாலே, பின்பு முலையின் முகங்கருகி, வீங்கிப், பாரமாய்த் தமது மென்மைக்கு ஒவ்வாத பஞ்சணைமேலே தங்கினாரென்க.”