பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1533 

   (இ - ள்.) புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதேபோல் - பிணக்கின்போது மகளிர்தம் கூந்தலிலுள்ள மலரைச் சிந்துவதுபோல; குலவிய சிறகர்ச் செங்கண் கருங்குயில் குடைய - விளங்கிய சிறகினையும் செங்கண்களையும் உடைய கரிய குயில் குடைவதால்; கொம்பர் நிலவிய தாது பொங்க நீள்மலர் மணலிற் போர்த்து - கொம்பிலேயிருந்து விளக்கமான மகரந்தத் தூள்பொங்க, நீண்ட மலர்கள் மணலில் வீழ்ந்து அதனை மறைத்ததனால்; கலவியில் படுத்த காய்பொன் கம்பலம் ஒத்தது - கலவி காரணமாக விரித்த பொன்னாலான கம்பலத்தை ஒத்தது.

   (வி - ம்.) புலவி - ஊடல். போது - மலர். சிறகர் - சிறகு. செங்கட்கருங்குயில் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. நிலவிய - விளங்கிய. தாது - பூந்துகள். மணலில் வீழ்ந்து அதனைப் போர்த்து என்க. கலவி - புணர்ச்சி. புணர்ச்சிகுறித்தென்க. படுத்த - விரித்த.

( 113 )
2712 காசுநூல் பரிந்து சிந்திக்
  கம்பலத் துக்க தேபோன்
மூசுதேன் வண்டு மொய்த்து
  முருகுண்டு துயில மஞ்ஞை
மாசில்பூம் பள்ளி வைகி
  வளர்ந்தெழு மகளி ரொப்பத்
தூசுபோற் சிறக ரன்னந்
  தொழுதியோ டிரியச் சோ்ந்தார்.

   (இ - ள்.) நூல் பரிந்து காசு சிந்தி - நூலறுந்து மணிகள் சிந்தி; கம்பலத்து உக்கதேபோல் - கம்பலத்திலே வீழ்ந்து கிடந்த தன்மைபோல; மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில - நெருக்கமாகத் தேனும் வண்டும் மொய்த்துத் தேனைப் பருகிக் (கம்பலம் போன்ற இடத்திலே) துயில்; மஞ்ஞை மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழும் மகளிர் ஒப்ப - மயில்கள் குற்றமற்ற மலர்ப்பள்ளியிலே தங்கித் துயின்று எழும் மகளிரைப்போல இருக்க; தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு - வெள்ளாடைபோற் சிறகினையுடைய அன்னம் தன் திரளுடன்; இரிய - ஓட; சேர்ந்தார் - அவர்கள் அடைந்தனர்.

   (வி - ம்.) காசு - மணி, பூந்துகள் பரவிக் கம்பலத்தை ஒத்த அவ்விடத்தே வண்டுகள் துயின்று கிடப்பன கம்பலத்தின்மேல் உதிர்ந்து கிடக்கும் மணிகட்குவமை. தேன் - ஒருவகை வண்டு. முருகு - தேன். மஞ்ஞை - மயிர். வளர்ந்து - துயின்று. தொழுதி - திரள். இரிதல் - கெட்டோடுதல்.

( 114 )