பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1542 

   இழிபென்றது. இளிவரலாகிய சுவையாதலின் அதனை உணர்த்தும் நால்வகை மெய்ப்பாட்டில் மூப்பினையே கொள்க. அது, 'மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ - டியாப்புற வந்த இளிவரல் நான்கே' (தொல். மெய். 6) என்பதனாலுணர்க. இனி நான்கையும் வெறுத்தான் என்றுமாம்.

( 127 )
2726 கைப்பழ மிழந்த மந்தி
  கட்டியங் கார னொத்த
திப்பழந் துரந்து கொண்ட
  சிலதனு மென்னை யொத்தா
னிப்பழ மின்று போகத்
  தின்பமே போலு மென்று
மெய்ப்பட வுணர்வு தோன்றி
  மீட்டிது கூறி னானே.

   (இ - ள்.) கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது - கையிலுள்ள பழத்தை இழந்த மந்தி கட்டியங்காரனைப் போன்றது; இப்பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான் - இப் பழத்தை அவற்றை ஓட்டிக் கைக்கொண்ட பணியாளனும் என்னைப் போன்றான்; இப்பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று - இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் இன்று யான் நுகர்கின்ற இன்பத்தையே ஒக்கும் என்று; மெய்ப்பட உணர்வு தோன்றி - உண்மையாக உணர்வு பெற்று; மீட்டு இது கூறினான் - திரும்பவும் தன்னுளத்துடன் இதனையுங் கூறுகின்றான்.

   (வி - ம்.) அரசை இழந்த கட்டியங்காரனை ஒத்தது என்றவாறு. அரசு பழத்திற்குவமை. சிலதன் - பணியாளன்; இப்பழத்தை நுகர்ந்து இவன் எய்தும் இன்பம் யானுகரும் இவ்வின்பமே போலும் என்பது கருத்து.

( 128 )
2727 மெலியவர் பெற்ற செல்வம்
  வேரொடுங் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை
  வரம்பிகந் தரம்பு செய்யுங்
கலியது பிறவி கண்டாங்
  காலத்தா லடங்கி நோற்று
நலிவிலா வுலக மெய்த
  னல்லதே போலு மென்றான்.

   (இ - ள்.) மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து - வலிமையில்லாதவர் பெற்ற செல்வத்தை வேரொடு பறித்து;