| 
    (வி - ம்.) இத்துணையும், மக்கள் யாக்கை பெறுதற்கருமையும், அது பெற்றாலும் நன்னிலமும் நற்குலமும் நல்வடிவும் நல்லறமும் பெறுதற் கருமையுங்கூறி, இனி, பெறுதற்கரிய பேறுபெற்றுச் சிறப்புற்றுப் பல்லோரானும் நன்கு மதித்துப் புகழப்பெற்ற அவ்வியாக்கை நிலைபெறா தொழியுந் தன்மை கூறுகின்றார். 
 | 
| 
    (வி - ம்.) ஈண்டு, “நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி மெய்யுணர்ந்தவழிக் கயிற்றிலரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும் என்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையு முடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழி யல்லது பொருளிகளிற் பற்றுவிடாதாகலின் இது மன் வைக்கப்பட்டது“ எனவரும் பரிமேலழகர் மெய்ம்மொழி நினையற்பாலது, (திருக்குறள், 34 - நிலையாமை முன்னுரை) 
 | 
 ( 156 ) |