பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1563 

2764 இட்டிவேல் குந்தங் கூர்வா
  ளெரிநுனைச் சுரிகை கூட
நட்டவை நிரைத்த பூமி
  நவையுடை நரகர் பொங்கி
யுட்பட வெழுந்து வீழ்ந்தாங்
  கூன்றகர்த் திட்ட வண்ண
மெட்டெலாத் திசையுஞ் சிந்திக்
  கிடப்பவா லடக்க மில்லார்.

   (இ - ள்.) அடக்கம் இல்லார் நவை உடை நரகர் - (முன்னர்) ஐம்பொறிகளில் அடக்கம் இல்லாராய்த் தீவினையை உடையராகிய நரகர்; இட்டி வேல் குந்தம் கூர்வாள் எரிநுனைச் சுரிகை கூட - ஈட்டியும் வேலும் குந்தமும் கூரிய வாளும் எரியும் முனையையுடைய சுரிகையும் கூட; நட்டவை நிரைத்த பூமி - நட்டவை நிரைத்து நிற்கின்ற பூமியிலே; பொங்கி எழுந்து உள்பட வீழ்ந்து - துன்பத்தாலே பொங்கி எழுந்து (அப்படைகளின்) அழுந்தும்படி வீழ்ந்து; ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம் - அவ்விடத்தில் ஊனைச் சிதறத் தட்டினாற்போல; எட்டு எலாத் திசையும் சிந்திக் கிடப்ப - எட்டாகிய எல்லாத் திசையினுஞ் சிதறிக் கிடப்பர்.

   (வி - ம்.) ஆல் : அசை.

   இட்டி - ஈட்டி. சுரிகை - ஒருவகை வாள். நவை - குற்றம். வண்ணம் - உவமப்பொருட்டு. எட்டுத் திசையெலாம் என இயைக்க. ஆல் : அசை. அடக்கமிலார் சிந்திக் கிடப்ப என்க.

( 166 )
2765 வெந்தடி தின்ற வெந்நோய்
  வேகத்தான் மீட்டு மாலை
பைந்தொடி மகளி ராடும்
  பந்தென வெழுந்து பொங்கி
வந்துடைந் துருகி வீழ்ந்து
  மாழ்குபு கிடப்பர் கண்டாய்
கந்தடு வெகுளி வேகக்
  கடாமுகக் களிற்று வேந்தே.

   (இ - ள்.) கந்து அடு வெகுளி வேகக் கடாமுகக் களிறு வேந்தே - தூணைத் தகர்க்கும் சீற்றமும் விரைவும் மதமுங் கொண்ட களிற்றையுடைய வேந்தனே!; வெம் தடி தின்ற வேம் நோய் வேகத்தால் - (முற்பிறப்பிலே) கொடிய ஊனைத் தின்ற கொடிய தீவினையின் கொடுமையாலே; பைந்தொடி மகளிர் ஆடும் பந்து என - பசிய வளையல் அணிந்த பெண்கள்