பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1568 

பொய்கைகளை விரும்பி நோக்கி; புக்குநீர் உண்ணல் உற்றால் புகுந்து அதில் நீரைப் பருகத் தொடங்கினால்; சீப்படு குழம்பதாகி - அது சீயாலுண்டான குழம்பாகையினாலே; செல்லல் உற்று - வருத்தமடைந்தவராய்; அந்தோ என்னக் கூப்பிடு குரலாய் - ஐயோ! என்று கூவும் குரலராய்; குறைப்பனைக் குழாங்கள் ஒத்து - தலைபோன பனைத்திரளை ஒத்து; நிற்பர் - நிற்பர்.

   (வி - ம்.) 'அணிந்து' என்னும் பாடத்திற்குத் 'தோன்றும் ' என ஒருவினை வருவிக்க.

   வேட்டு - விரும்பி. செல்லல் - துன்பம். அந்தோ : இரக்கக் குறிப்பு. குறிப்பனை- மடல் முதலியவாகிய தலைப்பகுதி அற்றுப்போன பனைமரம்.

( 174 )
2773 நறுமலர்த் தாம நான்று
  நானநீர் பிலிற்றும் பந்தர்க்
குறுகலுங் குடநெய் பெய்த
  கொந்தழல் போன்று பொங்கிப்
பறையல கனைய வெண்பாற்
  பசுங்கழற் குண்டு பைங்க
ணுறுதுயர் நரகர் தம்மை
  யுருகச்சுட் டிடுங்க ளன்றே.

   (இ - ள்.) பறையலகு அனைய வெண்பல் பசுங்கழல் குண்டு பைங்கண் உறுதுயர் நரகர் - பலகறையைப் போன்ற வெண்மையான பற்களையும், பசுங்கழல் போலும் ஆழமான பைங்கண்களையும் உடைய மிகுதுயர் கொண்ட நரகர்; நறுமலர்த் தாமம் நான்று - நறிய மலர் மாலைகள் தூக்கப் பெற்று; நானநீர் பிலிற்றும் பந்தர்க் குறுகலும் - கத்தூரி நீர்த்துனி துளிக்கும் பந்தரை (நீர் வேட்டுக்) குறுகின அளவிலே; குடநெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி - குடநெய் சொரிந்த மிகுநெருப்பெனப் பொங்கி; தம்மை உருகச் சுட்டிடும் - அவர்களை உருகுமாறு கூட்டிடும்.

   (வி - ம்.) 'பறையலகு' இக் காலத்துப் 'பலகறை' ஆயிற்று.

   நான்று - தொங்கி. பிலிற்றும் - துளிக்கும். குண்டுகண் - உட்குழிந்த கண். உறுதுயர் - மிகுந்த துன்பம். சுட்டிடுங்கள் : ஒருசொல் கள் : அசை.

( 175 )
2774 வெந்துருக் குற்ற செம்பின்
  விதவையு ளழுத்தி யிட்டு
மெந்திர வூச லேற்றி
  யெரியுண மடுத்துஞ் செக்கிற்
சுந்தெழுந் தரைத்தும் போகச்
  சுண்ணமா நுணுக்கி யிட்டு
மந்தரத் தனைய துன்பம்
  வைகலு முழப்ப மாதோ.