பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1572 

குங் கண்ணராய்; குணன் நஞ்சர் - தம் பண்பினால் நஞ்சினை உடையராய்; கூற்று அனைய கோள் நாய் மடுப்ப - கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலையுடைய நாயைச் செலுத்த; அஞ்சிக்கழுத்து ஒளிப்ப கணமஞ்ஞை கண்டாய் - அதற்கு அஞ்சித் தம் கழுத்தைச் சிறகிலே மறைப்பன திரளான மயில்கள் காண்.

   (வி - ம்.) குணன் - குணம் : மகரத்திற்கு னகரம் போலி. கோள் - கொலைத்தொழில். கணம் - திரள். மஞ்ஞை - மயில். மழை - முகில் : ஆகுபெயர்.

( 181 )
2780 மண்ணார மஞ்ச ளுரிஞ்சி மலர்சூட்டிக்
கண்ணார் மறியறுத்துக் கையா லுதிரந்தூ
யுண்ணீரே தேவீ ருவந்தென்ப திவ்வுலக
நண்ணார்க் கடந்தோய் நமனுலகி னான்மடங்கே.

   (இ - ள்.) நண்ணார்க் கடந்தோய்! - பகைவரை வென்றவனே!; மண்ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி - கழுவுதல் நிறைத்து மஞ்சளைப் பூசி மலரை அணிந்து; கண்ஆர் மறி அறுத்து - கண்போல வளர்த்த மறியை அறுத்து ; கையால் உதிரம்தூய் - தன் கையாலே குருதியைத் தூவி; தேவீர் உவந்து உண்ணீர் என்பது இவ்வுலகம் - தேவர்களே! இதனை மகிழ்ந்து பருகுவீர் என்றுரைக்கும் இவ்வுலகம் ;! நமன் உலகின் நான் மடங்கே - கூற்றுவன் உலகினும் நான்கு மடங்கு கொடியது.

   (வி - ம்.) மண்ணுதல் - நீராட்டித் தூய்மை செய்தல். உரிஞ்சி - தடவி. தாமே வளர்த்த மறி என்பது தோன்றக் கண் ஆர் மறி என்றார். மறி - ஆட்டுக்குட்டி. தேவீர் உவந்துண்பீரே என்னும் கொடுமைத்து இவ்வுலகம் என்றவாறு.

( 182 )
2781 மங்கை மனாவனைய மென்சூன் மடவுடும்பு
செங்கண் வரிவரால் செந்நீ ரிளவாளை
வெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்ப
வங்காந் தழுகின்ற தார்கண்ணே நோக்குமே.

   (இ - ள்.) மனா அனைய மென்சூல் மடவுடும்பு - அக்கு மணி போன்ற மெல்லிய சூலையுடைய இளைய உடும்பையும்; செங்கண்வரி வரால் - சிவந்த கண்களையும் வரிகளையும் உடையவராலையும்; செந்நீர் இளவாளை - நல்ல நீரில் உள்ள இளவாளையையும்; வெங்கருனை புல்லுதற்கு மங்கை வேறு வேறாக் குறைப்ப - விருப்பூட்டும் பொரிக்கறியாகச் செய்வதற்கு நல்லாள் துண்டு துண்டாக அறுக்கும்போது; அங்காந்து அழுகின்றது - அவை உயிர்போம்போது வாயைத் திறந்து அழுகின்ற தீவினை; ஆர் கண்ணே நோக்கும்? - யாரிடத்தே செல்லும்?