பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1579 

உறுந்துன்பம் - மக்கள் அடையும் துன்பம்; நண்ணா நரகத்தின் நான்காம் மடி - சென்று சேர்தற்கரிய நரகத்தின் துன்பத்தினும் நான்கு மடங்கு துன்பமுடையது.

   (வி - ம்.) 'நான் மடங்கு' என்பது மிகுதியென்னும் பொருட்டு. அந்நரகம் நிகோதம்; அஃது இரத்தினப்பிரபை முதலிய நரகங்கள் ஏழினும் கீழுள்ளது என்பர்.

( 195 )
2794 செந்தீப் புகையுண்டுஞ் சேற்று ணிலைநின்று
மந்தோ வெனமாற்றா லாற்றப் புடையுண்டுந்
தந்தீ கெனாமுன்கை வீக்கத் தளர்வுற்று
நொந்தார் குடிச்செல்வர் நோன்மை நுகம்பூண்டார்.

   (இ - ள்.) நொந்தார் குடிச்செல்வர் - நின் பகைவர்களின் நாட்டிற் குடியிருக்கும் மக்களாகிய செல்வர்; தந்தீக எனா - அரசனுக்குப் பொருள் தருக என்று கூறி; முன்கை வீக்கத் தளர்வுற்றும் - முன் கையைப் பிணிக்கத் தளர்ந்தும்; சேற்றுள் நிலை நின்றும் - சேற்றிலே நிலையாக நின்றும்; அந்தோ என மாற்றால் ஆற்றப் புடையுண்டும் - ஐயோ என்று அலற வளாரால் நன்றாக அடியுண்டும்; செந்தீப் புகையுண்டும் - செந்தீயின் புகையிலே அகப்பட்டும்; நோன்மை நுகம் பூண்டார் - பொறுமையாகிய நுகத்தைப் பூண்டனர்.

   (வி - ம்.) இதனால் பண்டைக்காலத்தே இறைப்பொருள் கொடாதார்க்கு அரசியலார் கொடுக்குந் தண்டனை சிலவற்றை உணரலாம். மாறு - வளார்.

( 196 )
2795 கண்சூன் றிடப்பட்டுங் கால்கை களைந்தாங்கே
யண்பல் லிறக்கையா லாற்றத் தகர்பெற்று
நுண்சாந் தரைப்பார்போ னோவ முழங்கையாற்
புண்செய் திடப்பட்டும் புன்கணு ழப்பவே.

   (இ - ள்.) அண்பல் இறக் கையால் ஆற்றத் தகர்பெற்றும் - மேற் பல்லுடையக் கையால் நன்றாக அறையப்பட்டும்; நுண் சாந்து அரைப்பார் போல் - நுண்ணிய சாந்தை அரைப்பவர் போல; முழங்கையால் நோவப் புண்செய்திடப்பட்டும் - முழங்கையினால் வருந்தும்படி புண்ணாக்கப்பட்டும்; கால் கை களைந்து ஆங்கே கண்சூன்றிடப்பட்டும் - காலும் கையுந் தறியுண்டு அங்கே கண்ணும் தோண்டப்பெற்றும்; புன்கண் உழப்ப - துன்பத்திலே அழுந்துவர்.

   (வி - ம்.) தந்தீக : வினைத் திரிசொல். 'தந்தீக' என ஒருமையாற் கூறினார் தனித்தனியே தண்டித்தலின்.

( 197 )