அடியை வணங்கி; தெளியும் பொருள்கள் - தெளிகின்ற பொருள்கள்; ஓரைந்தும் அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோர் - ஐந்தும் ஆறும் ஒன்பதும் என்று அறவோர் உரைப்பர்.
(இ - ள்.) செய்கை உரிய வினைப்பயத்தை - தம் செயலால் தமக்கு உரியவாகிய இருவினையின் பயனை; பெரிய இன்பத்து இந்திரனும் - மிகுதியான இன்பத்தையுடைய இந்திரனும்; பெட்ட செய்கைச் சிறு குரங்கும் - விரும்பிய செய்கையுடைய சிறிய குரங்கும்; உண்ணும் எனவே உணர்ந்து - நுகரும் என்றே உணர்ந்து; அரியர் என்ன அவனை மகிழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு அரியர் என்று வியந்து இந்திரனை மகிழாமலும்; எளியர் என்ன இகழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு எளியர் என்று வெறுத்துக் குரங்கை இகழாமலும்; இருசார் வினையும் தெளிந்தாரே - நல்வினை தீவினைகளின் தன்மை இத்தன்மைத்தென்று தெளிந்தவரே; இறைவன் நூலும் தெளிந்தாரே - இறைவனுடைய பரமாகமத்தையும் தெளிந்தவராவர்.