பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1595 

கண்களையும் செவ்வாயையும் உடைய பிறர் தாரத்தை விரும்பி அவரைக் கூடி ஒழுக்கந் தவறும் மக்கள்; புறஞ்சொல் கூர்முள் மத்திகைப் புடையும் அன்றி - (இம்மையிலே) புறஞ்சொல்லாகிய கூரிய முள்ளையுடைய சவுக்கால் அடிபெறுதலே அன்றி; ஒருவர் வாய் உமிழப்பட்ட தம்பலம் ஒருவர் வாய்க்கொண்டு - (அவளை முன்னர் நுகர்ந்த) ஒருவர் அவள் வாயிலே உமிழப்பட்ட தம்பலத்தைப் (பின்னர் நுகர்வார்) ஒருவராகிய தம் வாயிலே கொண்டு;  அரியவை செய்ப - (இங்ஙனம்) அரியவற்றைச் செய்வார்கள்; வையத்து ஆண் பிறந்தார்கள் அன்று - (இவர்கள்) உலகிலே ஆண் மக்களாய்ப் பிறந்தவர்களன்று.

   (வி - ம்.) இச் செய்யுள், இல்லறம் புரிவார்க்குரிய விரதங்களுட் காத்தல் அரிது என்று இதனைக் கூறியது. 'பிறன்மனை நோக்காத பேராண்மை' (குறள்.148) என்று வள்ளுவர் கூறியது காண்க.

( 223 )
2822 ஒழுக்கமே யன்றித் தங்க
  ளுள்ளுணர் வழிக்கு மட்டும்
புழுப்பயி றேனு மன்றிப்
  பிறவற்றின் புண்ணு மாந்தி
விழுப்பய னிழக்கு மாந்தர்
   வெறுவிலங் கென்று மிக்கார்
பழித்தன வொழித்தல் சீலம்
  பார்மிசை யவர்கட் கென்றான்.

   (இ - ள்.) பார் மிசையவர்கட்கு - உலகில் அறம்புரிவார்க்கு; ஒழுக்கமே அன்றித் தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும் - ஒழுக்கத்தைக் கெடுத்தலே அன்றித் தங்களுடைய மனவுணர்ச்சியைக் கெடுக்கின்ற கள்ளையும்; புழுப் பயில் தேனும் - புழுப்பயின்ற தேனையும்; அன்றி - அல்லாமல்; பிறவற்றின் புண்ணும் மாந்தி - பிறவுயிர்களின் புண்ணாகிய தசைகளையும் உண்டு; விழுப்பயன் இழக்கும் மாந்தர் - சிறந்த வீடுபேற்றினை இழக்கும் மக்கள்; வெறுவிலங்கு என்று - வீணான விலங்கு போல்வர் என்று; மிக்கார் பழித்தன ஒழித்தல் சீலம் - பெரியோர் பழித்தவற்றை நீக்குதல் சீலமாகும்.

   (வி - ம்.) ஒழுக்கத்தைக் கெடுத்தலே அன்றி என்க. உள்உணர்வு - உள்ளத்தின் கண்ணதாகிய உணர்ச்சி என்க. தேனின் இழிவு தெரிப்பார் புழுப்பயில்தேன் என்றார். ”உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின் ” என்றார் வள்ளுவனாரும், (257). ”மழித்தலு நீட்டலும் வேண்டாவுலகம் பழித்த தொழித்து விடின்” என்ற திருக்குறளும் (280) ஈண்டு நினைக்கப்படும்.

( 224 )