பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1597 

ஐந்தின் மெய்வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு - சீவபுற்கலம் முதலிய ஐந்தின் உண்மை வகையினை ஆராய்கின்ற சிந்தையாகிய விளக்கை அவியாமல் எரியவிட்டு; பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றி - பொய்யும் கொலையும் களவும் காமமும் ஆசையுமாகிய இருள் புகாமல் தடுத்து; செய்தவம் நுனித்த சீலக் கனை கதிர்த் திங்கள் ஒப்பார் - செய்கின்ற தவத்தைக் கூர்க்க நிகழ்த்தின சீலமாகிய கதிரினையுடைய திங்களைப் போன்றவராய்,

   (வி - ம்.) இப் பாட்டு முதல் நான்கு பாட்டுக்கள் வரை ஒரு தொடர்.

   ”ஒருமையு ளாமைபோல் ஐந்தடக்க லாற்றின்” என்றார் வள்ளுவனாரும். ஐந்து - சீவபுற்கலமுதலியன. சிந்தையாகிய விளக்கு என்க. பொய் முதலிய நான்கிருளும் புகாது என்க. கனைகதிர் - மிக்க கதிர்.

( 226 )
2825 வாய்ச்சிவா யுறுத்தி மாந்தர்
  மயிர்தொறுஞ் செத்தி னாலும்
பூச்சுறு சாந்த மேந்திப்
  புகழ்ந்தடி பணிந்த போதுந்
தூக்கியிவ் விரண்டு நோக்கித்
   தொல்வினை யென்று தேறி
நாச்செறு பராவு கொள்ளார்
  நமர்பிற ரென்று முள்ளார்.

   (இ - ள்.) மாந்தர் வாய்ச்சிவாய் உறுத்தி - மாந்தர்கள் வாய்ச்சியினது வாயைச் சேர்த்து; மயிர்தொறும் செத்தினாலும் - மயிர்க்கால் தோறும் செதுக்கினாலும்; பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்து அடிபணிந்த போதும் - பூசுதற்குரிய சந்தனத்தை ஏந்தி நின்று புகழ்ந்து அடியில் வணங்கினாலும்; இவ்விரண்டும் தூக்கி நோக்கி - இவ்விரண்டினையும் ஒப்பிட்டு நோக்கி; தொல் வினை என்று தேறி - ஊழ்வினை என்று தெளிந்து; நாச்செறுபராவு கொள்ளார் - நாவாற் பழித்தலையும் புகழ்தலையும் கொள்ளாமல்; நமர் பிறர் என்றும் உள்ளார் - (அவர்களையும்) நம்மவரென்றோ பகையாளரென்றோ நினையாதவராய்,

   (வி - ம்.) இதனுடன் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழிமுறையாற் கூறிய மெய்ப்பாடு முப்பத்திரண்டினுள் மூன்றாம் நிலைக் கண் வரும் நடுவுநிலைக்கு மேற்கோளாகச் ”செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந்து ஓடாமை” எனவரும் பேராசிரியர் உரையை நினைக. (தொல், மெய்ப்-12).

( 227 )