பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1599 

சந்தனமும் அகிற்புகையும் ஆராய்ந்த மலரும் ஆகியவற்றால் அருச்சித்து; ஆனார் - அமையாராய்; குணம் புரிந்து அடங்கினார்க்கு - நற்பண்பை விரும்பி அடங்கிய அப் பெரியார்கட்கு; நால் அமிர்தம் மூன்றின் கொடுப்பர் - நால்வகை உணவை மனம் மொழி மெய்களின் தூய்மைப் பாட்டுடன் கொடுப்பர்.

   (வி - ம்.) நால்வகை : உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன.

   மூன்று - நெஞ்சம் மொழி உடல் ஆகிய மூன்றும்.

( 229 )
2828 ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காகு மார்ந்த
வின்பத மருளி யீத லிடையென மொழிப யார்க்குந்
துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டினார்க்கு
நன்பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறிய லாகா.

   (இ - ள்.) ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் - ஒன்பது வகையினாற் கொடுக்க வேண்டுமென்று கூறியது உத்தமராயினார்க்காகும்; ஆர்ந்த இன்பதம் யார்க்கும் அருளி ஈதல் இடையென மொழிப - நிறைந்த இனிய சோற்றை யார்க்கும் அருளிக் கொடுத்தல் இடைப்பட்ட தானம் என்பர்; துன்பு உறவிலங்கு கொன்று சொரிந்து சோறூட்டினார்க்கும் - துன்பம் அடைய விலங்கைக் கொன்று கலந்து சோற்றை உண்பித்தார்க்கும்; நன்பொருள் வழங்கினார்க்கும் - அவர்கட்கு நல்ல பொருளைக் கொடுததவர்கட்கும்; பயன் நமக்கு அறியல் ஆகா - விளையும் தீவினைப் பயன்கள் நமக்கு அறிந்து கூறமுடியாது.

   (வி - ம்.) ஒன்பதாவன :

”எதிர்கொளல் இடம்நனி காட்டல் கால்கழீஇ
அதிர்பட அருச்சனை அடியின் வீழ்தரல்
மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய்
உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார்”

   என இவை.

( 230 )

27தானப் பயன்

வேறு

2829 கூற்றுநா வலறுவ தனைய கூரிலை
யேற்றநீர்த் துளும்புவா ளிறைவ வீங்கினிப்
போற்றினை கேண்மதி பொருவில் புண்ணியர்க்
காற்றிய கொடைப்பய னறியக் கூறுவாம்.