பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1606 

   (இ - ள்.) இன் அகில் ஆவி விம்மும் எழுநிலை மாடம் சேர்ந்தும் - இனிய அகிற் புகை நிறையும் எழுநிலை கொண்ட மாடத்திலே சேர்ந்தும்; பொன்மலர்க் காவு புக்கும் - அழகிய பூஞ்சோலையை அடைந்தும்; புரிமணி வீணை ஓர்த்தும் - நரம்பினையுடைய அழகிய யாழிசையை நுகர்ந்தும்; நன்மலர் நான வாவி நீர் அணி நயந்தும் - அழகிய மலர்களையுடைய மணங்கமழும் வாவியிலே ஆடும் நீர்க்கோலத்தை விரும்பியும்; செல்வத் தொல் நலம் பருகி - செல்வத்தையுடைய பழைய நலத்தைப் பருகி; காமத் தொங்கலால் பிணிக்கப்பட்டார் - காமமாகிய மாலையாற் கட்டப்பட்டார்.

   (வி - ம்.) ஆவி - புகை. பொன்மலர்க்காவு என்றது கற்பகச் சோலையை. நீர்க்கோலம் - நீராடற் பொருட்டுச் செய்துகொள்ளும் ஒப்பனை. காமத்தொங்கல் என்றார் கட்டுண்ட காலையும் மெத்தென்றினிமை நல்குதல் கருதி.

( 242 )
2841 பூமுற்றுந் தடங்க ணாளும்
  பொன்னெடுங் குன்ற னானுங்
காமுற்று நினைந்த வெல்லாங்
  கற்பக மரங்க ளேந்தத்
தாமுற்றுக் கழிப்பர் தான
  மிடையது செய்த நீரா
ரேமுற்றுக் கரும பூமி
  யிருநிதிக் கிழமை வேந்தே.

   (இ - ள்.) வேந்தே!- அரசே!; பூ முற்றும் தடங்கண்ணாளும் - மலரின் தன்மை நிரம்பிய பெரிய கண்களையுடையவளும்; பொன் நெடுங்குன்றனானும் - நெடிய பொன்மலை போன்றவனும்; காம்உற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்த - தாம் விருப்பமுற்று எண்ணிய எல்லாவற்றையுங் கற்பக மரங்கள் கொடுக்க; தாம் உற்றுக் கழிப்பர் - (தலைமைக் கொடை பூண்ட) தாங்கள் அவற்றை நுகர்ந்து காலங்கழிப்பர்; இடையது தானம் செய்த நீரார் - இடைப்பட்டதாகிய தானத்தைச் செய்த இயல்பினார்; கரும பூமி இருநிதிக் கிழமை ஏமுற்றுக் கழிப்பர் - கரும பூமியிலே பெருஞ்செல்வ உரிமையிலே மயங்கிக் காலங்கழிப்பர்.

   (வி - ம்.) ஏமம் - மயக்கம். 'ஏம்' என நின்றது.  'காமம்,' என்பதும் 'காம்' என நின்றது. கடைப்பட்ட தானத்திற்குப் பாவமே உண்மையின் ஈண்டுக் கூறிற்றிலர். தானப்பயனாவது தானத்தின் அளவினும் மிகப் பெரிய அளவினதாகும். உறக்குந் துணையதோர் ஆலம்வித்தீண்டி இறப்ப நிழற்பயத்தலிதற் கொப்பாகும்.

( 243 )