பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1608 

மாலையை அணிந்தவர்; கப்பத்துள் அமரர் ஆவார் - (பதினாறுவகைக்) கற்பம் என்னும் உலகிலே வானவர் ஆவர்; காட்சி இன் அமிர்தம் உண்டார் - காட்சியாகிய இனிய அமிர்தை நுகர்ந்தவர்கள்; நீர் உலகம் எல்லாம் ஒப்ப ஒருகுடை நிழற்றி - கடல் சூழ்ந்த உலகம் எல்லாவற்றையும் சமனாக ஒருகுடை நீழலிலே இருத்தி; இன்பம் கைப்படுத்து அலங்கல் ஆழிக் காவலர் ஆவர் - இன்பத்தைக் கைக்கொண்டு மாலையணிந்த ஆணையாழியைச் செலுத்தும் அரசர் ஆவார்கள்.

   (வி - ம்.) திருமணி - மாணிக்கமணி. கப்பம் - கற்பம் : பிராகிருதச் சிதைவு. ”கப்பத் திந்திரன் காட்டிய நூலின்” என்றார் இளங்கோவடிகளாரும். ஆழிக்காவலர் - சக்கரவர்த்திகள்.

( 245 )

19 வீடு பேறு

வேறு

2844 வீட்டின தியற்கைநாம் விளம்பிற் றீங்கதிர்ப்
பாட்டரும் பனிமதி பழித்த முக்குடை
மோட்டிருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்திநூ
லீட்டிய பொருளகத் தியன்ற தென்பவே.

   (இ - ள்.) நாம் வீட்டினது இயற்கை விளம்பின் - நாம் வீட்டின் தன்மையை விளக்கிக் கூறின்; தீ கதிர்ப் பாடு அரும் பனி மதி பழித்த முக்குடை - இனிய கதிர்களையுடைய இளைய ஞாயிற்றினது கூறு பாட்டினையும் அரிய குளிர்ந்த திங்களைப் பழித்த முக்குடையையும்; மோடு இருங் கொழுமலர்ப் பிண்டி மூர்த்தி - புடைபட்ட வயிறு போன்ற பெரிய கொழுவிய மலர்களையுடைய அசோகின் நீழலில் எழுந்தருளிய தலைவன்; ஈட்டிய நூற்பொருள் அகத்து இயன்றது - ஈட்டிய நூற்பொருளிடத்தே கூறப்பட்டது.

   (வி - ம்.) தீங்கதிர்ப்பாடு - இளைய ஞாயிற்றினது கூறுபாடு. ஞாயிற்றின் கூறுபாட்டையும் மதியையும் பழித்த குடை என்றது சந்திராதித்தியம் என்னும் பெயர்ப் பொருள் கருதிப் போலும். பிண்டிமூத்தி - அருகக்கடவுள். நூல் - ஆகமம். ”வாமனார்வடித்த நூல்” என்றார் முன்னரும். 'அதனையான் கூறக்கேள்' என்பது குறிப்பெச்சம். என்ப : அசை.

( 246 )
2845 உள்பொரு ளிதுவென வுணர்தன் ஞானமாந்
தௌ்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்
விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே
யொள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே.