பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1610 

   (இ - ள்.) கடை இலா அறிவொடு காட்சி வீரியம் கிடையிலா இன்பமும் - முடிவில்லாத அறிவுக் காட்சியும் வீரியமும் ஒப்பிலாத இன்பமும் என; கிளந்த அல்லவும் - கிளந்தனவும் அல்லனவும்; தம் உடைய குணங்களோடு ஓங்கி - தம்முடைய குணங்களாலே மிக்கு; விண்தொழ அடைதலான் - விண்ணிலுள்ளார் தொழும்படி வந்து சேர்வதாலே; மேல் உலகு - வீட்டுலகு என்பது ஒன்று உண்டு; அறியப்பட்டது - அது யாவராலும் அறியப்பட்டது

   (வி - ம்.) அல்ல என்றவை : நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயு இன்மை, அழியா வியற்கை.

( 249 )

20. பிறவிகள் அற உரை

2848 மாதவ னெனப்பெயர் வரையி னவ்வரை
யேதமி லெயிறணி பவள வாய்த்தொடுத்
தாதியி லறவுரை யருவி வீழ்ந்தென
மாதுயர் மலங்கெட மன்ன னாடினான்.

   (இ - ள்.) அவ் வரை எயிறு அணி பவளம் வாய் ஆதியில் - அழகிய வரைகளையுடைய, எயிறுகளால் அணிந்த பவளம் போலும் வாயிற் பிறந்த; ஏதம் இல் அறவுரை அருவி தொடுத்து - குற்றம் அற்ற அறவுரைகளாகிய அருவி தொடுத்து ; மாதவன் எனப் பெயர் வரையின் வீழ்ந்தென - மாதவன் எனப் பெயர் பெற்ற வரையினின்றும் வீழ்ந்ததாக; மாதுயர் மலங்கெட மன்னன் ஆடினான் - பெருந்துயரைச் செய்யும் மலங்கெடும்படி வேந்தன் முழுகினான்.

   (வி - ம்.) 'நுண்ணிய வரியொடு திரண்டு' (சீவக.1702) என்றார் முன்னும். வாய் மேகமாயிற்று. வீழ்ந்தது என : வீழ்ந்தென : தொகுத்தல் விகாரம்.

( 250 )
2849 எல்லையி லறவுரை யினிய கேட்டபின்
றொல்லையெம் பிறவியுந் தொகுத்த பாவமும்
வல்லையே பணிமின மடிகளென்றனன்
மல்லைவென் றகன்றுபொன் மலர்ந்த மார்பினான்.

   (இ - ள்.) மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான் - மற்றொழிலை வென்று பரந்து திருமகள் மலர்ந்த மார்பினையுடைய சீவகன்; எல்லை இல் இனிய அறவுரை கேட்டபின் அளவு இல்லாத இனியவாகிய அறவுரைகளைக் கேட்ட பிறகு; அடிகள் - அடிகளே!; எம் தொல்லை பிறவியும் தொகுத்த பாவமும் - எம்முடைய முற்பிறப்பையும் அப் பிறவியில் யாம் ஈட்டிய