பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1618 

   கட்டி வைத்து வளர்த்தார் என்னாது முலைத்தடத்தே அணைத்து வைத்து வளர்த்தார் என்றமையால், சீவகனும் கட்டுண்டான் என்பதற்குக் காரணம் இன்மையுணர்க” என்று ஈண்டு நச்சினார்க்கினியர் கூறி, முன்னரெங்கும் சீவகன் கட்டுண்டான் என்று வரும்போது, 'மனத்தாற் கட்டுண்டான்' 'ஆசிரியன், தந்தை ஆகியோர் சொல்லாற் கட்டுண்டான்' என்றே கூறிவந்ததற்குச் சான்று காட்டுவர்.

( 265 )

வேறு

2864 கண்டா னொருநாட் கதிர்மாமுடி மன்னர் மன்னன்
றண்டா மரைசூழ் தடத்திற்பிரித் தார்கள் யாரே
யொண்டா ரிளங்கோவென் றுழையவர் கூற வல்லே
கொண்டீங்கு வம்மின் கொலைவேலவன் றன்னை யென்றான்.

   (இ - ள்.) கதிர்மா முடி மன்னர் மன்னன் - ஒளி பொருந்திய மாமுடி அணிந்த அரசர்க்கரசன்; ஒருநாள் கண்டான் - ஒரு நாள் இவர்களிடம் அப் பார்ப்பைக் கண்டான்; தண்தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே (என) - குளிர்ந்த தாமரை சூழ்ந்த பொய்கையினின்றும் பிரித்தவர்கள் யாவரோ என்று வினவ; உழையர் ஒண்தார் இளங்கோ என்று கூற - அதனைக் கேட்ட பணியாளர் ஒள்ளிய தார் அணிந்த இளவரசன் என்று கூற; கொலை வேலவன் தன்னை ஈங்கு வல்லே கொண்டு வம்மின் என்றான் - (அரசன்) கொலைவேலனை இங்கே விரைவிற் கொண்டு வம்மின் என்றான்.

   (வி - ம்.) அரசரைப் பிடியாமற் பார்ப்பைப் பிடித்தான் என்னும் இகழ்ச்சி தோன்றக் 'கொலைவேலவன்' என்றான். பார்ப்பைக் கட்டுதல் கூட்டில் அடைத்தல் செய்யாமையின் அரசற்குக் காட்சியானமை உணர்க'என்று தம் கருத்திற்கேற்ப நச்சினார்க்கினியர் கூறுவர்.

( 266 )
2865 படுகண் முழவும் பசும்பொன்மணி யாழு மேங்க
விடுகுந் நுசுப்பி னவராட விருந்த நம்பி
யடிகட் கடிக ளருளிற்றென் றிறைஞ்ச வல்லே
கடிவிம்மு தாரான் கழல்கையிற் றொழுது சோ்ந்தான்.

   (இ - ள்.) படுகண் முழவும் பசும்பொன் மணி யாழும் ஏங்க - ஒலியெழும் கண்களையுடைய முழவும் பசிய பொன்னும் மணியும் புனைந்த யாழும் ஒலிக்க; இடுகும் நுசுப்பினவர் ஆட - நுண்ணிடையார் ஆட; இருந்த நம்பி - கண்டிருந்த இளவரசனிடத்தே (சென்று); அடிகள் அடிகட்கு அருள் இற்று என்று இறைஞ்ச - அரசர் இளவரசர்க்கு அருளியது இஃது என்று உழையர் கூறி வணங்க; கடி விம்மு தாரான் - மணம் விம்மும் மலையான்; வல்லே கழல் கையின் தொழுது சேர்ந்தான்