பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1633 

2890 மின்னார் சிலம்பிற் சிலம்புங்குர லன்ன மேனாண்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய்சிறை வைத்த தனாற்
பொன்னார மார்ப சிறைப்பட்டனை போலு மென்றா
னின்னாப் பிறவிப் பிணிக்கின்மருந் தாய சொல்லான்.

   (இ - ள்.) இன்னாப் பிறவிப் பிணிக்கு இன்மருந்து ஆய சொல்லான் - துன்பந் தரும் பிறவி நோய்க்கு இனிய மருந்து ஆகிய சொல்லையுடைய முனிவன்; மன்னா! - அரசனே!; மேல் நாள் - முற்பிறவியிலே; மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் பிரித்தாய் பிரிந்தாய் - ஒளிநிறைந்த சிலம்பைப்போல ஒலிக்குங் குரலையுடைய அன்னப்பார்ப்பைக் கிளையினின்றும் பிரித்தாய், அத்தீவினையாலே நீயும் இப்பிறப்பிலே கிளையினின்றும் பிரிந்தாய்; பொன் ஆர மார்ப! - பொன் மாலை மார்பனே!; சிறை வைத்ததனால் சிறைப்பட்டனை என்றான் - முன் அதனைச் சிறை வைத்ததனால் நீயும் சிறைப்பட்டாய் என்றான்.

   (வி - ம்.) போலும் : அசை (ஒப்பில் போலி). நச்சினார்க்கினியர் ‘முன் அதனைக் காவல் செய்து வைத்த அனதாலே நீயும் ஈண்டுச் சிறைப் பட்டாய் போற் பிறர்க்குத் தோன்றினை‘ என்று பொருள் கூறுவர்.

அவர் கூறும் விளக்கம்:

பிறரிடத்து வளர்ந்தமை குறிப்பான் உணரக் கூறினாராதலின் சுநந்தையைப் பிறரென்று கூற்றாற் கூறாராயினர். போலும் என்பது, ‘வேறு பட வந்த உவமத் தோற்றம்‘ (தொல். உவம. 32) என்னுஞ் சூத்திரத்து அடங்கும்; ஒப்பில் போலியன்று; இதனைத் தற்குறிப்பேற்றம் என்ப. சீவகற்குச் சிறைப்பட்ட தன்மையின்மை, ‘விலங்கி வில் உமிழும் பூணான்‘ (சீவக.1167) என்னுங் கவியிற் கூறினார். ஈண்டுச் சாரணர், ‘சிறைவைத்ததனாற் ....சிறைப்பட்டனை போலும்‘ என்று கூறிய சிறை என்னுஞ் சொல்லும், முன்னர்க்கூறிப்போந்த ‘கட்டு‘ என்னுஞ் சொல்லும் பரியாயச் சொல்லன்றி வேறு வேறு பொருள்தருஞ் சொற்களாம்; என்னை? இத் தமிழ் மொழியில் உலக வழக்காகிய இயற்சொற்களில் ஒரு வினையை உணர்த்துதற்கு ஒரு சொல் வழங்குதல் அன்றி இருசொல் வழங்காமையின். சிறையென்பது தடுத்துக் காத்தலை உணர்த்தும்; முன்னர், ‘அருஞ்சிறை‘ (சீவக. 2867) என்பதற்குப் பின்னர், ‘காவல் செய்து வைத்தவர்கள்‘ (சீவக. 2875) என்றமையால். அன்றியும், ‘சிறைகாக்குங் காப்பெவன் செய்யும்‘ (குறள். 57), ‘சிறைபனியுடைந்த சேயரி மழைக்கண்‘ (குறுந். 86), ‘கொலைச்சிறை உய்ந்து போகும் ஒருவனை‘ (சீவக. 2884) என்றாற் போல்வன பிறவற்றானும், சிறைக்கால், நீர்ச்சிறை என்னும் வழக்கானும் உணர்க. இஃது ஆகுபெயராய்ச் சிறைவைத்தான் என்றால் சிறைக்கோட்டத்தை உணர்த்துமாறும் உணர்க. இதற்குக் ‘கோலுதல், அகப்படுத்தல், தகைத்தல்‘ என்றாற்போல ஆசிரியன் முழுவதூஉந் திரித்த திரிசொற்கள் பரியாயச் சொற்களாம்; இதற்குச் சிக்கல் என்பது திசைச்சொல். இனிக் கட்டினான் என்னுஞ்சொல் உண்டான், வந்தான் போனான் என்பனபோலப் புடைபெயர்ச்சித் தொழில் உணர்த்துஞ் சொற்கு வேறொரு சொல்லின்றி நிற்கும்; ‘இதற்கு, வீக்கினான், பிணித்தான், யாத்தான் என்றாற்போல