பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1635 

மாதவர் செழும் பொன்பாதம் - புகழை அணிந்த மாதவரின் வளவிய பொன்னனைய திருவடிகளை; ஏர் அணி மணிமுடி - அழகு பொருந்திய மணிமுடியாலே; காவலன் இறைஞ்சி ஏத்தினான் - அரசன் வணங்கி வாழ்த்தினான்.

   (வி - ம்.) துடி - உடுக்கை. ‘காரால் உண்டான அழகுடைய மயில்‘ என்பர் நச்சினார்க்கினியர். காவலன் - ஈண்டுச்சீவகன். ஏர் - அழகு. சீர் - சீர்த்தி; பெரும்புகழ்.

( 294 )
2893 நலத்திரு மடமக ணயந்த தாமரை
நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ
லுலப்பருந் தவத்தினா லோங்கு சாரணர்
செலத்திரு விசும்பொளி சிறந்த தென்பவே.

   (இ - ள்.) நலம் மடம் திருமகள் நயந்த தாமரை நிலத்து இருந்து - அழகுறும் இளமை பொருந்திய திருமகள் விரும்பிய தாமரைப் பூவையுடைய இடத்தேயிருந்து; உலப்பருந் தவத்தினால் ஓங்கு சாரணர் - கெடுதல் அற்ற தவத்தினாலே மேம்பட்ட சாரணர் இருவரும்; கெடுதல் அற்ற தவத்தினாலே மேம்பட்ட சாரணர் இருவரும்; இருசுடர் நிமிர்ந்து செல்வ போல் - இரண்டு கதிர்கள் எழுந்து செல்வனபோல; விசும்புசெல - வானிலே எழுந்து செல்ல; திரு ஒளி சிறந்தது - அவர் திருவொளி அவ்வானம் எங்கும் சிறந்தது.

   (வி - ம்.) ‘சாரணர் தாமரை இடத்தேயிருந்து இருசுடர் செல்வபோல் விசும்பு செல ஒளி சிறந்தது‘ என்க.

( 295 )

21 தாயத் தீர்வு

2894 சாரணர் போயபின் சாந்த மேந்திய
வாரணி வனமுலை வஞ்சிக் கொம்பனார்
போரணி புலவுவேற் கண்கள் பூத்தன
நீரணி குவளைநீர் நிறைந்த போன்றவே.

   (இ - ள்.) சாரணர் போயபின் - சாரணர் இருவரும் சென்ற பின்னர்; சாந்தம் ஏந்திய வார் அணி வனம் முலை வஞ்சிக் கொம்பனார் - சந்தனந் தாங்கிய வாரணிந்த அழகிய முலைகளையுடைய வஞ்சிக்கொடி போன்றவர்களின்; போர் அணி புலவுவேல் கண்கள் - போருக்குப் புனைந்த, புலவு கமழும் வேல் போன்ற கண்கள்; நீர் அணி பூத்தன குவளை நீர் நிறைந்த போன்ற - நீர் நிலையிலே அழகுற மலர்ந்தனவாகிய குவளை மலர்கள் நீர் நிறைந்தாற்போல நீர் நிறைந்தன.

   (வி - ம்.) அரசனுடைய துறவை எதிர் நோக்கி நீர்மல்கின.