பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1641 

நம்பி - சீவகனுக்கு இளவலாகிய நந்தட்டன்; அரசு ஒன்றும் வேண்டான் - அரசைச் சிறிதும் வேண்டாமல்; மன்றல் வீற்றிருந்து மின்னும் மணிக்குவடு அனைய தோளான் - மணம் வீற்றிருந்து ஒளிரும் மணிவரை போன்ற தோளையுடைய சீவகன்; உவப்பதே வேண்டினான் - விரும்புந் துறவையே விரும்பினான்.

   (வி - ம்.) வண்டு, தேன் என்பன வண்டின் வகை. இமிர்தல் - முரலுதல்; இமிர்தற்குக் காரணமான மதநீரையுடைய யானை என்க. இளைய நம்பி - நந்தட்டன். ஒன்றும் - சிறிதும். வேண்டான் : முற்றெச்சம். ளுவப்பது : வினையாலணையும் பெயர். உவக்கப்படுவது என்க; அது துறவு.

( 305 )
2904 பொலிவுடைத் தாகு மேனும்
  பொள்ளலிவ் வுடம்பென் றெண்ணீ
வலியுடை மருப்பி னல்லால்
  வாரணந் தடக்கை வையா
தொலியுடை யுருமுப் போன்று
  நிலப்படா தூன்றின் வைவேற்
கலிகடிந் துலகங் காக்குங்
  காளையைக் கொணர்மி னென்றான்.

   (இ - ள்.) இவ்வுடம்பு பொலிவு உடைத்தாகுமேனும் பொள்ளல் என்று எண்ணி - இவ்வுடம்பு மேலே தோற்றப் பொலிவையுடையதேனும் உள்ளே உறுதியுடைத்தன்று என்று நினைத்து; உருமுப்போன்று ஒலியுடை வாரணம் - இடிபோன்ற ஒலியையுடைய களிறு; நிலப்படாது - நிலத்தில் வீழாமல்; வலியுடை மருப்பின் அல்லால் தடக்கை வையாது - தன்னைத் தாங்கும் வலியையுடைய மருப்பிலே அல்லாமல் தன் துதிக்கையை வையாது; ஊன் தின் வைவேல் கலிகடிந்து உலகம் காக்கும் - பகைவருடைய ஊனைத் தின்னும் கூரிய வேலால் வறுமையை நீக்கி உலகத்தைக் காக்கின்ற; காளையைக் கொணர்மின் என்றான் - சச்சந்தனைக் கொண்டு வருக என்றான்.

( 306 )
2905 கழுமணி யார மார்பிற்
  காவலன் மக்கள் காய்பொ
னெழுவளர்ந் தனைய திண்டோ
  ளிளையவர் தம்முண் மூத்த
தழுமலர்க் கொம்பு போலுந்
  தத்தைநாட் பயந்த நம்பி
விழுமணிப் பூணி னானை
  வீற்றிரீஇ விதியிற் சொன்னான்.