பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1645 

   (இ - ள்.) நாந்தக உழவர் ஏறே! - வாள்வீரர் தலைவனே!; வேந்தர் தாம் ஆய்ந்த அறிவு அருளொடு உடையர் ஆகி - அரசர் ஆராய்ந்த அறிவும் அருளும் உடையவராகி; காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறு போல - ஒருவனைச் சினந்து எறியும் கடிய கல்லைக் காலம் வருமளவும் கவுளிலே மறைத்து வைத்த களிறுபோல; வெகுளி மாற்றி விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் - பகைவர்மேற் சென்ற சினத்தை மாற்றி விரும்புமவற்றையெல்லாம் (கொடுத்து) அவரை அழிக்கும் எண்ணத்தை மறைப்பது; நன்பொருளாவது என்றான் - அவர்க்கு நல்ல பொருளாவது என்றான்.

   (வி - ம்.) 'களிறுகவுள் அடுத்த எறிகல் போல - ஒளித்த துப்பினை' (புறநா. 30) என்றார் பிறரும்.

”பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.” (478)

எனவும்,

”காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.” (440)

   எனவும் எழுந்த திருக்குறள்கள் ஈண்டு நினையற்பாலன.

( 312 )
2911 குடிபழி யாமை யோம்பிற்
  கொற்றவேன் மன்னர் மற்று
னடிவழிப் படுவர் கண்டா
  யரும்புகழ் கெடுத லஞ்சி
நொடியலோ ரெழுத்தும் பொய்யை
  நுண்கலை நீத்த நீந்திக்
கொடியெடுத் தவர்க்கு நல்கு
   கொழித்துணர் குமர வென்றான்.

   (இ - ள்.) கொழித்து உணர் குமர! - தீமையை நீக்கி நன்மையை உணர்கின்ற குமரனே!; குடி பழியாமை ஓம்பின் - குடிமக்கள் இகழாமற் காப்பாயெனின்; கொற்றவேல் மன்னர் உன் அடிவழிப் படுவர் கண்டாய் - வெற்றிவேல் வேந்தர் நின்னுடைய அடியிடத்தே வீழ்வார்காண்; அரும்புகழ் கெடுதல் அஞ்சி ஓர் எழுத்தும் பொய்யை நொடியல் - அரிய புகழ் அழிவதை அஞ்சி ஓரெழுத்தேனும் பொய்ம்மொழி புகலாதே; நுண்கலை நீத்தம் நீந்திக் கொடி எடுத்தவர்க்கு நல்கு என்றான் - நுண்ணிய கலைகளாகிய கடலை நீந்தி வென்றிக்கொடி எடுத்த அமைச்சர்க்கு எப்போதும் அருள்செய் என்றான்.