பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1675 

   மகளிர்க்காக்குவர். அரசியரின் விலாவணை முற்கூறியதனாலும், நுகர்ச்சி மகளிரின் விலாவணை கூறவேண்டியதனாலும் இங்ஙனம் மாற்றிப் பொருள்கோடலிற் போதிய பயனின்றென்க.

( 366 )
2965 பூப்பரிவார் பொன்செய் கலம்பரிவார் பொன்வளையை
நீப்பி ரெனப்புடைப்பார் நீடாமஞ் சிந்துவா
ரேப்பெற்ற மான்பிணைபோ லேங்குவா ரின்னுயிரைக்
காப்பரேற் காவலனார் காவாரோ வின்றேன்பார்.

   (இ - ள்.) பூப்பரிவார் - பூமாலையை அறுப்பார்; பொன் செய் கலம் பரிவார் - பொன்னாலான அணிகளை அறுப்பார்; பொன் வளையை நீப்பிர் எனப் புடைப்பார் - பொன்னாலான வளையலை நீங்குமின் என மோதி உடைப்பார்; நீள் தாமம் சிந்துவார் - நீண்ட மாலையைச் சிதறுவார்; ஏப்பெற்ற மான் பிணைபோல் ஏங்குவார் - அம்பேற்ற மான் பிணைபோல ஏங்குவார்; காவலனார் இன் உயிரைக் காப்பரேல் இன்று காவாரோ என்பார் - உயிரைக் காக்கும் வல்லவராகிய அரசர் இனிய உயிர்களைக் காப்பவரெனின் இன்று எம் உயிரைக் காவாரோ என்பார்.

   (வி - ம்.) பூ - மாலைக்கு ஆகுபெயர். பரிவார் - அறுப்பார். நீப்பிர் : முன்னிலைப் பன்மை : நீள்தாமம் : வினைத்தொகை. ஏ - அம்பு. காவலனார் - காத்தல் வல்லவர்.

( 367 )
2966 கழுநீருந் தாமரையுங் கண்டனவே போலு
முழுநீர்வேற் கண்ணும் முகமு முலறிச்
செழுநீர் மணிக்கொடிகள் காழகஞ் சோ்கொம்பா
யழுநீர வாயலறி யல்லாப்ப போன்றாரே.

   (இ - ள்.) கழுநீரும் கண்டனவே போலும் முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறி - கழுநீரையும் தாமரையையும் சேரக் கண்டாற்போலும் முழுநீர்மையுடைய வேல் போன்ற கண்ணும் முகமும் உலர்ந்து; செழுநீர் மணிக்கொடிகள் காழகம்சேர் கொம்பாய் - நன்னீர்மையுடைய மணிக்கொடிகள் கருமை பொருந்திய கொம்பாய்; அழுநீரவாய் -அழந்தன்மையுடையனவாய்; அலறி - கதறி; அல்லாப்பபோன்றார் - அல மருகின்றவற்றைப் போன்றனர்.

   (வி - ம்.) இவர்கள் அழுது வற்றி உலர்ந்தனராகையாற் காழகஞ்சேர் கொம்பு அலமரல் போன்றனர்.

   வளவிய நீர்மையையுடைய மணியென்றார், பல நிறத்து மணிகளையுங் கருதி.

( 368 )