பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1688 

   மக்கள் ஆற்றிய தவம் என்னும் இலார்களாகில் என மாறுக. என்னும் - ஒருசிறிதும். அருந்தவமே பின் செல்லும் மணியும் பொன்னும் செல்லா என்றவாறு. வேற்றுவர் - அயலார்.

( 388 )
2987 காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்க னீரை
யூதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற
மாதரார் நெஞ்சந் தேறி மாதவஞ் செய்து மென்றார்
காதலான் காத லென்னு நிகளத்தா னெடுங்க ணாரே.

   (இ - ள்.) ஊது வண்டு உடுத்த தாரான் காதலான் - முரலும் வண்டுகள் சூழ்ந்த மாலையானாகிய அன்புடையான்; மாதரார் காதல் அம் சேற்றுள் பாய்ந்த - தன் மனைவியரின் காதலாகிய சேற்றுக்குள்ளே பாய்ந்த; மதி எனும் கலங்கல் நீரை - அறிவு என்னும் நீரை; உவர்ப்பினின் உரிஞ்சித் தேற்ற - வெறுத்தல் என்பதனால் உரிஞ்சித் தெளிவிக்க; நெடுங்கணார் காதல் என்னும் நிகளத்தால் - அம் மாதர்கள் தம் கணவன்மேல் வைத்த அன்பு என்னும் பிணிப்பாலே; நெஞ்சம் தேறி மாதவம் செய்தும் என்றார் - உள்ளம் தெளிந்து மாதவம் செய்வோம் என்றனர்.

   (வி - ம்.) தம் கணவன்மேல் வைத்த காதலால் அவன் கூறிய துறவிலே அவர்கள் மனம் தொடங்குண்டதென்க. அவர்கட்கு இயற்கையாகத் துறவுள்ளம் இல்லையென்றும், சீவகன் மொழியாலே உண்டாயிற்றென்றும் கருதுக. நச்சினார்க்கினியர் மொழிமாற்றுக் கோளால் 'மாதராருடைய அறிவென்னும் நீரைக் காதலாகிய பிணிப்பாலே உரிஞ்சித் தேற்ற அவர் நெஞ்சு வெறுப்பினால் தேறித் தவஞ் செய்தும் என்றார்' என்பர். அவர், 'தாரானாகிய காதலான் தன் மனைவியர்மேல் வைத்த காதல் என்னும் பிணிப்பாலே தேற்ற' என்று கூட்டுவர். 'காதலனிடத்து வைத்த காதலால் துறந்தாரென்றல் பொருந்தாமை யுணர்க' என மறுப்பர் .

   இவர் கருத்துப் பொருந்தாமை மேல் 'நாடகம்' எனத் தொடங்கும் 2989 ஆஞ் செய்யுளை நோக்கின் அறியவரும்.

( 389 )
2988 தூமஞ்சால் கோதை யீரே
  தொல்வினை நீத்த நீந்தி
நாமஞ்சால் கதியி னீங்கி
  நன்பொன்மே லுலகி னுச்சி
யேமஞ்சா லின்பம் வேண்டி
  னென்னோடும் வம்மி னென்றான்
காமஞ்சாய்த் தடர்த்து வென்ற
  காஞ்சனக் குன்ற மன்னான்.