பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1695 

29.சமவசரண வருணனை

வேறு

2999 நரம்பெழுந் திரங்கின வீணை நன்குழல்
பரந்துபண் ணுயிர்த்தன பைய மெல்லவே
விருந்துபட் டியம்பின முழவம் வீங்கொலி
சுரந்தன சுடர்மணிப் பாண்டி லென்பவே.

   (இ - ள்.) வீணை நரம்பு எழுந்து இரங்கின - யாழின் நரம்புகள் எழுந்து இசைத்தன; நன்குழல் பரந்து பைய பண் உயிர்த்தன - இனிய குழல்கள் மெல்லப் பரவி யிசை எழுப்பின; முழவம் மெல்ல விருந்து பட்டு இயம்பின - முழவங்கள் புதுமையாகத் தோன்றி ஒலித்தன; சுடர்மணிப் பாண்டில் வீங்கு ஒலி சுரந்தன - ஒலி பொருந்திய அழகிய கஞ்ச தாளங்கள் மிக்க ஓசையைப் பெருக்கின.

   (வி - ம்.) வானவர் சீவகனைச் சுமந்து சென்ற பொழுது இவைகள் ஒலித்தன என்க.

   வீணை நரம்பு என மாறுக. விருந்து - புதுமை. முழவம் இயம்பின என்க. பாண்டில் - கஞ்சதாளம். என்ப, ஏ : அவைகள். பெருந்தவம் ஆற்றிய பெறற்கரும் பெற்றியரை விண்ணுளார் சுமந்து செல்வார். மண்ணுளார் இத்தகையார்க்குச் சிவிகை தாங்குவர்.

( 401 )
3000 மங்குலா யகிற்புகை மணந்து கற்பகப்
பொங்குபூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணந்
தங்கியித் தரணியும் விசும்புந் தாமரோ
செங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்றவே.

   (இ - ள்.) அகிற்புகை மணந்து மங்குலாய் - அகிற் புகை கலந்து இருளாய்; பொங்கு கற்பக மாலைகள் பொலிந்து - பொங்குகின்ற கற்பக மாலைகள் அழகுற்று; பூஞ்சுணம் தங்கி - அழகிய சுண்ணப்பொடி தங்கி; இத் தரணியும் விசும்பும் செங்கதிர்த் திருமணிச் செப்புப் போன்ற - இந் நிலவுலகும் வானுலகும் சிவந்த கதிர்களையுடைய மணியிருக்கின்ற செப்பைப் போன்றன.

   (வி - ம்.) மணி : சமவ சரணம்.

   மங்குல் - இருள். புகைமணந்து மங்குலாய் என்க. சுணம் - சுண்ணம். தரணி - உலகம். தாம். அரோ : அசைகள். மணி - சமவ சரணம். அஃதாவது : பூமிக்கு ஐயாயிரம் வில்லுயரத்திற்கு மேலே பன்னிரண்டு யோசனை அளவுள்ளதாய்ச் சௌதரு மேந்திராதி தேவர்களால் நிருமிக்கப் பட்டதோர் அருகன் கோயில் என்க.

( 402 )