பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1699 

ஞாயிறு போன்று; இறைவன் தோன்றினான் - அருகப்பெருமான் தோன்றினான்.

   (வி - ம்.) மணி : ஈண்டு மாணிக்கம். ஒளிமிக்கிருத்தலின், பாற்கடலிற் பருதியென்றார். இவர் இருபத்து நான்காந் தீர்த்தங்கரர் என்பர்.

( 409 )
3008 வினையுதிர்த் தவர்வடி வின்ன தென்னவே
வனைகதிர்த் தடக்கைவைத் திருந்த வாமனார்
கனைகதிர்த் திருமுக மருக்க னாகவான்
புனைமலர்த் தாமரை பூத்த தொத்தவே.

   (இ - ள்.) வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்ன - இருவினையையுங் கெடுத்தவர் வடிவு இத்தன்மையாதாக இருக்குமென்பதுபோல; வனைகதிர்த் தடக்கை வைத்து இருந்த வாமனார் - வனைந்த ஒளியுறுங் கையை வைதது இருந்த வாமனாருடைய; கனைகதிர்த் திருமுகம் அருக்கன் ஆக - மிக்க ஒளியையுடைய அழகிய முகம் ஞாயிறாக; வான் புனைமலர்த் தாமரை பூத்தது ஒத்த - வானவர் முகங்கள் அழகிய தாமரை மலர்கள் மலர்ந்தது போன்றன

   (வி - ம்.) வினை - இருவினைகளும். வாமனார் - அருகக்கடவுள். கனை - மிக்க. அருக்கன் - ஞாயிறு. வான் : ஆகுபெயர். வானுலகுக்கு ஆகிப் பின் வானவர்க்கு ஆகிப் பின் அவர்தம் முகத்திற்காகலான் - மும்மடியாகுபெயர் என்க.

( 410 )
3009 இரிந்தன விருவினை யிலிர்ந்த மெய்ம்மயிர்
சொரிந்தன கண்பனி துதித்துக் காதலா
லரிந்தது மணிமிட றலர்பெய்ம் மாரிதூஉய்த்
திரிந்தனன் வலமுறை திலக மன்னனே.

   (இ - ள்.) காதலால் - (மன்னனுக்கு இறைவன் மேற் சென்ற) காதலாலே; இருவினை இரிந்தன - நல்வினையுந் தீவினையுங் கெட்டன; மெய்ம்மயிர் இலிர்த்த - மெயம்மயிர்கள் சிலிர்த்தன; கண் பனி சொரிந்தன - கண்கள் உவகைநீர் சொரிந்தன; மணிமிடறு துதித்து அரிந்தது - வாழ்த்தி அழகிய குரல் கம்மியது; திலக மன்னன் பெய்மாரி அலர்தூய் வலமுறை திரிந்தனன் - திலகம் போன்ற அம் மன்னன் பெய்யும் மாரிபோல மலர்களைத் தூவி வலமுறையாகத் திரிந்தனன்.

   (வி - ம்.) காதலால் இருவினை இரிந்தன என இயைக்க. மிடறு - ஈண்டுக் குரலுக்கு ஆகுபெயர். அரிந்தது - அரிக்குரல் பட்டது என்றவாறு; கம்மியது என்பதாம்.

( 411 )