பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1700 

3010 முத்தொளிர் தாமமு முருவ மாமணித்
தொத்தொளிர் தாமமுஞ் சொரிபொற் றாமமுந்
தத்துநீர்த் தண்கடற் பவழத் தாமமும்
வைத்தபூந் தாமமு மலிந்து தாழ்ந்தவே.

   (இ - ள்.) முத்து ஒளிர் தாமமும் - முத்துக்களால் ஆகி விளங்கும் மாலையும்; உருவம் மாமணித் தொத்து ஒளிர் தாமமும் - அழகிய பெரிய மணிகளால் ஆகிக் கொத்தாக ஒளிரும் மாலையும்; சொரிபொன் தாமமும்-ஒளியைச் சொரியும் பொன்மாலையும்; தத்துநீர்த் தண்கடல் பவழத் தாமமும் - தத்தும் அலைநீரையுடைய தண்கடலிற் கிடைத்த பவளமாலையும்; வைத்த பூந்தாமமும் மலிந்து தாழ்ந்த - வைத்த மலர் மாலையும் மிக்கு அவ்விடத்தே தங்கின.

   (வி - ம்.) உருவம் - அழகு. மா - பெருமை. தொத்து - கொத்து. பொற்றாமம் - பொன்மாலை. தத்துநீர் : வினைத்தொகை. பூந்தாமம் - மலர்மாலை. மலிந்து - மிக்கு.

( 412 )
3011 மணிவரை யெறிதிரை மணந்து சூழ்ந்தபோ
லணிமயிர்க் கவரிக ளமர ரேந்தினார்
துணிமணி முக்குடை சொரிந்த தீங்கதிர்
பணிமணிக் காரிருள் பருகு கின்றதே.

   (இ - ள்.) மணிவரை எறிதிரை மணந்து சூழ்ந்த போல் - மாணிக்க மலையை, வீசும் அலைகள் நெருங்கிச் சூழ்ந்தன போல; அணிமயிர்க் கவரிகள் அமரர் ஏந்தினார் - அழகிய மயிர்களால் ஆகிய கவரிகளை வானவர் கையிலேந்தி இறைவனைச் சூழ்ந்து வீசினார்; துணி மணி முக்குடை சொரிந்த தீ கதிர் - துண்டங்களாகிய மணிகளிழைத்த முக்குடைகள் பெய்த இனிய கதிர்; பணி மணிக் காரிருள் பருகுகின்றது - பிற ஒளிகளைத் தாழ்த்து நீலமணிகளின் இருளைப் பருகுகின்றது.

   (வி - ம்.) மணி - ஈண்டு மாணிக்கமணி, மணிவரை இறைவனுக்கும் அலைகள் கவரிக்கும் உவமைகள். துணி - தெளிந்த ஒளியையுடைய எனினுமாம். பணிமணி : வினைத்தொகை. ஏனைய ஒளிகளைத் தாழ்த்தும் மணி என்க.

( 413 )
3012 முழாத்திரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்
வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்
குழாத்தொடு மிறைகொளக் குனிந்து கூய்க்குயில்
விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே.

   (இ - ள்.) வீரன் பிண்டி - அருகப் பெருமானுடைய அசோக மரம்; முழாத்திரள் மொய்ம்மலர்த் தாமம் - முழவைப்