பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 171 

வேறு

 
306 கறைபன் னீராண் டுடன்விடுமின்
  காமர் சாலை தளிநிறுமின்
சிறைசெய் சிங்கம் போன்மடங்கிச்
  சேரா மன்னர் சினமழுங்க
வுறையுங் கோட்ட முடன்சீமி
  னொண்பொற் குன்றந் தலைதிறந்திட்
டிறைவன் சிறுவன் பிறந்தானென்
  றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின்.

   (இ - ள்.) பன்னீராண்டு உடன்கறை விடுமின் - பன்னீராண்டுவரை சேர இறைப்பொருளை நீக்குமின்; காமர்சாலை தளி நிறுமின் - அழகிய அறச்சாலைகளையும் கோயில்களையும் இயற்றுமின்; சேராமன்னர் சிறைசெய் சிங்கம்போல் சினம் மழுங்க மடங்கி - பகையரசர் சிறைப்பட்ட சிங்கங்களைப்போற் சினம் மழுங்குமாறு மடங்கி; உறையும் கோட்டம் உடன்சீமின் - இருக்கும் சிறைச்சாலைகளையெல்லாம் இடித்துத் தூய்மை செய்மின்; ஒண்பொன் குன்றம் தலைதிறந்திட்டு - ஒளிமிகும் பொற்குவியலைத் திறந்துவிட்டு; ஊர்தோறு உய்த்து - ஒவ்வோரூருக்குங் கொண்டு சென்று ; இறைவன் சிறுவன் பிறந்தான் என்று - வேந்தனுக்கு மகன் பிறந்தான் என்று : ஏற்பார்க்கு ஈமின் - (மகிழ்வுடன்) கேட்போருக்குக் கொடுமின்.

 

   (வி - ம்.) [இதுமுதல் விசயை தானே இரங்கிக் கூறுவன.]

 

   பாலக்கிரகாரிட்டம் பன்னீராண்டளவும் உண்டு என்றும் அதற்குச் சாந்தியாகப் பன்னீராண்டு கறைவிடுதல் அரசியல்பு என்றும் கொண்டு, 'பன்னீராண்டு' என்றாள். இனி, அரசர்க்குப் பதினேராவதாண்டிலே உபநயனம் பண்ணிப் பன்னீராவதாண்டிலே இல்லறக்கிழமை பூண்டு அரசுரிமை எய்துதல் இயல்பெனக் கொண்டு பன்னீராண்டும் உலகினார்க்குத் தானமாகவிடுதல் இயல்பெனலுமாம். மகவுபெற்றாற் சிறை வீடு செய்தல் தென்புலத்தார் கடனை நீக்குதலென்பர்.

 

   கறை - குடிகள் வேந்தற்கிறுக்குங் கடமைப் பொருள். ஒருசேர நீக்குமின் என்பார் உடன்விடுமின் என்றார். சீமின் - இடித்தொழிமின். திறந்திட்டு - திறந்துபோகட்டு. காமர்சாலை என்றது அறக்கோட்டத்தை. தளி - திருக்கோயில். நிறுமின் - நிறுவுமின். ஈமின் - வழங்குமின். மக்களைப் பெற்றுழிச் சிறை வீடு செய்தால் தென்புலத்தார் கடன் தீரும் என்பதொரு கொள்கை என்க.

( 277 )
307 மாட மோங்கு மணிநகருள்
  வரம்பில் பண்டந் தலைதிறந்திட்
டாடை செம்பொ னணிகலங்கள்
  யாவும் யாருங் கவர்ந்தெழுநாள்