பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1737 

3079 செழுமல ராவி நீங்கு
  மெல்லையிற் செறிந்து காயங்
கழுமிய வுதிரம் போல
   விமைப்பினுட் கரந்து நீங்கக்
கொழுமலர்க் குவளைக் கண்ணிக்
  கூற்றுயி ருண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாணாள்
  வீழ்ந்துக வெம்பி னானே.

   (இ - ள்.) செழுமலர் ஆவி நீங்கும் எல்லையில் - வளமைமிக்க உயிர் போங்காலத்து; காயம் செறிந்து கழுமிய உத்திரம் போல இமைப்பினுள் கரந்து நீங்க - உடம்பிலே செறிந்து கோத்திருக்கும் இரத்தம் ஒரு மாத்திரையிற் கரந்துபோமாறு போல இமைப்பளவிலே கரந்து நீங்க; கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்று உயிர் உண்பதேபோல் - வளமுறும் குவளை மலர்க் கண்ணி புனைந்த கூற்றுவன் உயிர் உண்பதே போல; விழுமிய தெவ்வர் வாழ்நாள் வீழ்ந்து உக வெம்பினான் - துன்பம் புரியும் வினையாகிய அப் பகைவருயிரைக் குறைந்துகெட உண்டான்.

   (வி - ம்.) காயம் - உடம்பு, கழுமிய - கலந்த, உதிரம் - குருதி, இமைப்பு - ஒரு நொடிப்பொழுது, கூற்று - கூற்றுவன், வெம்பினான் என்பதற்குச் சினந்தான் என்பதே நேரிய பொருள். உண்டான் என்பது தாற்பரியத்தாற் கொண்ட பொருளாகும்.

( 481 )
3080 குரோதனே மானன் மாயன்
  கூர்ப்புடை யுலோப னென்பார்
விரோதித்து விரலிற் சுட்டி
   வெருவரத் தாக்க வீர
னிரோதனை யம்பிற் கொன்றா
  னித்தைநீள் பசலைப் பேரோர்
விராகெனும் வேலின் வீழ
  வெகுண்டன னவரும் வீழ்ந்தார்.

   (இ - ள்.) குரோதனே மானன் மாயன் கூர்ப்பு உடை உலோபன் என்பார் - குரோதன் முதலாகிய நால்வரும்; விரோதித்து விரலின் சுட்டி வெருவரத் தாக்க - மாறுபட்டு, விரலாலே சுட்டிக் காட்டி அச்சுறத் தாக்க; நிரோதனை அம்பின் வீரன் கொன்றான் - நிரோதனை என்னும் அம்பாலே வீரன் கொன்றான் ; நித்தை நீள் பசலைப் பேரோர் - நித்திரையும் பிரசலையும் என்னும்