பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1759 

3119 முல்லையஞ் சூட்டு வேயின்
  முரிந்துபோ நுசுப்பி னல்லார்
மல்லற்குன் றேந்தி யன்ன
  மாதவ முற்றி னாரே.

   (இ - ள்.) வல்லவன் வடித்த வேல்போல் மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண் - தொழில் வல்ல கம்மியன் வடித்த வேல் பேல மலர்ந்து நீண்டு பரந்த ஒள்ளிய கண்களானே; உறவி ஓம்பி - எறும்பிற்கும் துன்பம் இன்றிக் காப்பாற்றி; மெல்ல ஒதுங்கியும் இருந்தும் நின்றும் - மெல்லென நடந்தும் இருந்தும் நின்றும்; மல்லல் குன்று ஏந்தி அன்ன மாதவம் - வளவிய குன்றை ஏந்தினாற்போன்ற மாதவத்தை; முல்லை அம் சூட்டு வேயின் முரிந்துபோம் நுசுப்பின் நல்லார் - முல்லையங் கண்ணியை வேய்ந்தாலும் முரிந்துபோகக் கூடிய இடையையுடைய அம்மங்கையர்; முற்றினார் - செய்து முடித்தனர்.

   (வி - ம்.) வல்லவன் - தொழில் வல்ல கம்மியன் என்க. நல்லார் கண்ணாலே உறவி முதலியவற்றையும் விழிப்புடன் பாதுகாத்து ஒதுங்கல் முதலியவற்றைச் செய்து தவமுற்றினார் என்க. உறவி - எறும்பு. தாங்கற்கரிதாகலின் தவத்திற்கு மல்லற் குன்றினை உவமித்தார்.

( 521 )

வேறு

3120 சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண்டெறூஉ
மாழை நோக்கினார் மேனி மாசுகொண்
டேழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார்.

   (இ - ள்.) சூழ்பொன் பாவையைச் சூழ்ந்து புல்லிய - நன்றென்று சூழ்ந்த பொற்பாவையைச் சூழ்ந்து தழுவிய; காழகப் பச்சைபோன்று - கருஞ்சேற்றையுடைய தோல்போல; கண்தெறூஉம் மேனி - முன்னர் நோக்கினார் கண்களைச் சுடும் தம்மேனியெல்லாம்; மாசு கொண்டு ஏழைப் பெண் பிறப்பு இடிய - அழுக்குப் படிந்து, எளிய பெண் பிறப்புக் கெடும்படி;' மாழை நோக்கினார் சிந்தித்தார் - இளமை பொருந்திய பார்வையினர் எண்ணினர்.

   (வி - ம்.) மாழை - இளமை. பச்சை - தோல்.

   சூழ்பொன் : வினைத்தொகை. முன்பு கண் தெறூஉம் மேனியில் இப்பொழுது மாசுகொண்டு சிந்தித்தார் என்க. பேதைமை மிக்க பிறப்பு என்பதுபற்றி ஏழைப் பெண் பிறப்பு என்று தேவர் இரங்கிக் கூறினார் என்க. சிந்தித்தல் - சுக்கிலத்தியானஞ் செய்தல்.