பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 176 

   (இ - ள்.) அந்தோ! - ஐயோ!; அகங்கை புறங்கை ஆனாற் போல் உள்ளங்கை புறங்கையாக மாறிய அத்துணை விரைவில்; விசயை பட்டனகொண்டு - விசயை அடைந்த துன்பங்களை உட்கொண்டு ; கந்துஆர் களிற்றுத் தம் கோமான் கழிய - தூணிற் கட்டப்பெற்ற களிறுகளையுடைய தம் இறைவன் இறக்க; மயில் ஓர் மயில் ஊர்ந்து வந்தாற்போல - ஒரு மயில் மற்றொரு மயிலைச் செலுத்தி வந்ததைப் போல; புறங்காட்டுள் தமியே வந்தாள்என - சுடுகாட்டிலே தனியே வந்து சேர்ந்தாள் என்று; சிந்தித்து இரங்கி அழுவனபோல் - எண்ணி வருந்தி அழுவனபோல; மரங்கள் பனிசேர் கள்நீர் சொரிந்தன - மரங்கள் குளிர்ந்த மது நீரைச் சொரிந்தன.

 

   (வி - ம்.) [அந்தோ: ஆசிரியருக்குத் தோன்றிய இரக்கத்தைக் குறிப்பது. நச்சினார்க்கினியர், 'வந்தாள் தமியே என' என்பதிலுள்ள என என்னுஞ் சொல்லுடன், 'அந்தோ என'க் கூட்டி மரங்கள் கூறியதாக ஆக்குவர்.]

( 283 )
313 அடர்பொற் பைம்பூ ணரசழிய
  வரும்பொற் புதல்வற் பெற்றிருந்த
லிடர்கொ ணெஞ்சத் திறைவியு
  மிருங்கண் ஞாலத் திருள்பருகிச்
சுடர்போய் மறையத் துளங்கொளிய
  குழவி மதிபெற் றகங்குளிர்ந்த
படர்தீ ரந்தி யதுவொத்தாள்
  பணைசெய் கோட்டுப் படாமுலையாள்.

   (இ - ள்.) அடர்பொன் பைம்பூண் அரச அழிய - மிகுதியான பொன்னாலான புதிய கலன்களை அணிந்த அரசன் அழிய; அரும்பொன் புதல்வன் பெற்றிருந்த -அரிய பொன்னனைய மகனைப் பெற்றிருந்த; இடர்கொள் நெஞ்சத்து - துயர்கொண்ட உள்ளமுடைய; பணைசெய் கோட்டுப் படாமுலையாள் இறைவியும் - பருத்த முகட்டினைக்கொண்ட சாயாத கொங்கைகளையுடைய விசயையும் (சிறிது துயர்நீங்கி); இருங்கண் ஞாலத்து இருள் பருகிச் சுடர்போய் மறைய - பேரிடமுடைய உலகின் இருளை நீக்கிய ஞாயிறு சென்று மறைய; துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த - விளங்கும் ஒளியையுடைய பிறை மதியைப்பெற்று மனம் அமைந்த; படர்தீர் அந்தியது ஒத்தாள் - துன்பம் நீங்கிய அந்த அந்திமங்கையைப் போன்றாள்.

 

   (வி - ம்.) அடர் - தகடுமாம். 'பொன் அடர்' என்க. (துன்பத்தை அடர் அரசு - துன்பத்தை நீக்கிய அரசன் என்பர் நச்சினார்க்கினியர். இறைவியும்: உம்: உயர்வு சிறப்பு. 'பணைசெய் - பிழைத்தலைச் செய்த) என்பர் நச்சினார்க்கினியர்.