பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 193 

குற்றதும்; வைகுஇருள் - (அதுவரை) குடியிருந்த இருள் ; தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய அல்லல் வெவ்வினை போல - பழமையான நல்வினை வந்த அளவிலே முன்தோன்றியிருந்த துன்பந்தருந் தீவினை போமாறுபோல; அகன்றது - நீங்கியது;

 

   (வி - ம்.) மல்லல் : மணி முதலியன, ['எய்திய எல்லை' என்று மாற்றி, அவர்கள் ஆங்குச் சென்ற அளவிலே என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.]

 

   எல்லை எய்திய என்றற்கு உலகம் பகற்பொழுதை எய்துதற்பொருட் டெனினுமாம். தொல்லை நல்வினை - பழைய நல்வினை. விசயையின் தீவினை நுகர்ச்சிக்கு இரக்கமுடையராய் இதுகாறும் ஓதிவந்த நூலாசிரியர் இவ்விடியல் அவள் தீவினைக்கும் ஒரு விடியலாதல் கருதி அத்தீவினையையே இருட்கும், இனி அவட்கெய்தும் நல்வினையையே ஞாயிற்றொளிக்கும் உவமையாக எடுத்தமை நினைந் தின்புறற்பாற்று.

( 314 )
344 நுணங்கு நுண்கொடி மின்னொர் மழைமிசை
மணங்கொள் வார்பொழில் வந்து கிடந்ததொத்
தணங்கு நுண்டுகின் மேலசைந் தாளரோ
நிணங்கொள் வைந்நுதி வேனெடுங் கண்ணினாள்.

   (இ - ள்.) நிணம்கொள் வைநுதிவேல் நெடுங் கண்ணினாள் - ஊன்பொதிந்த கூரிய நுனியையுடைய வேலனைய நீண்ட கண்ணாள்; மணம்கொள் வார்பொழில் - (ஆங்கு) மணமுறும் பெரிய பொழில் ஒன்றில்; நுணங்குநுண் கொடிமின் ஓர் மழைமிசை வந்து கிடந்தது ஒத்து - மிகவும் நுண்ணிய ஒழுங்குற்ற மின் ஒரு முகிலின்மேல் வந்து கிடந்தாற்போல; அணங்கும் நுண் துகில்மேல் அசைந்தாள் - இழை தெரியாமல் வருந்தும் மெல்லிய ஆடையின்மேற் கிடந்தாள்.

 

   (வி - ம்.) நுணங்கு நுண்கொடிமின் - மிக மிக நுணங்கிய கொடி மின்னல். இது விசயைக்குவமை பொழில் அல்லது அப்பொழிலிடத்து மணற்பரப்பு முகிலுக்கு உவமை என்க. அணங்கு நுண்டுகில் - காண்போர் கண்ணை வருத்தும் நுண்ணிழையையுடைய துகில் என்க. வைந்நுதி - கூர்த்த நுனி.

( 315 )
345 வைகிற் றெம்மனை வாழிய போழ்தெனக்
கையி னானடி தைவரக் கண்மலர்ந்
தைய வோவென் றெழுந்தன ளாய்மதி
மொய்கொள் பூமி முளைப்பது போலவே.

   (இ - ள்.) எம்அனை வாழிய போழ்து வைகிற்று என - (அப்போது) எம்அன்னாய்! வாழ்க! இரவு கழிந்தது என்று கூறி; கையினான் அடிதைவர - கையினால் அவள் அடியைக் கூனி