பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 199 

   (இ - ள்.) பிணை அன்னாள் - மான்பிணை போன்ற விசயை; பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி - பிடியின் கைபோலத் திரண்ட துடையின்மேல் அணிந்த 'குறங்குசெறி' என்னும் அணியையும் நீக்கி; அடிகிண் கிணியும் அம்சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றியபின் - அடியில் அணிந்த கிண்கிணியையும் சிலம்பையையும் காலாழியையும் நீக்கிய பிறகு; கொடி பூத்து உதிர்ந்த தோற்றம்போல் கொள்ளத் தோன்றி - கொடியொன்று மலர்ந்து உதிர்ந்த காட்சியைப்போல் தோன்றி ; அணங்கு அலற - (தன்னுடன் வந்த) தெய்வம் வாய்விட்டழ ; உரவோன் சிறுவன் உயர்கஎன - அறிவுடையோனாகிய மகன் மேம்படுக என்று ; கல்தோய் நுண்கலிங்கம் உடுத்தாள் - காவி தோய்த்த நுண்ணிய ஆடையை உடுத்தாள்.

 

   (வி - ம்.) கொடிப்பூத்து உதிர்ந்த : ஒற்றுமையாற் சினைவினை முதன்மேல் ஏற்றினார். கல் - காவிக்கல். 'உயர்க' என்றார் நோன்பின் பயன் அதுவாகலின்.

 

   உரவோன் சிறுவன் என்றாள், பகையை வெல்லப் பிறந்ததால்.

( 324 )

வேறு

 
354 பாலுடை யமிர்தம் பைம்பொற்
  கலத்திடைப் பாவை யன்ன
நூலடு நுசுப்பி னல்லா
  ரேந்தவு நோ்ந்து நோக்காச்
சேலடு கண்ணி காந்தட்
  டிருமணித் துடுப்பு முன்கை
வாலட கருளிச் செய்ய
  வனத்துறை தெய்வ மானாள்.

   (இ - ள்.) பாவைஅன்ன நூல்அடும் நுசுப்பின் நல்லார் - பாவை யனையரான, நூலனைய நுண்ணிடை மகளிர்; பால்உடை அமிர்தம் பைம்பொன் கலத்திடை ஏந்தவும்- பால்கலந்த சோற்றைப் புதிய பொற்கலத்திலே எடுத்து நிற்பினும் ; நேர்ந்து நோக்காச் சேல்அடு கண்ணி - விரும்பி நோக்காத சேலினை வென்ற கண்ணாள்; திருமணிக் காந்தள் துடுப்பு முன்கை வால் அடகு அருளிச்செய்ய - முன்பு அழகிய மணிபுனைந்த காந்தளின் துடுப்புப்போன்ற தன் முன்கையே தூய இலைக்கறியை இரங்கி நல்க ; வனத்துஉறை தெய்வம் ஆனாள் - (முன்னர் இல்லுறை தெய்வமானவள்) காட்டில் வாழும் தெய்வமாக ஆயினாள்.

 

   (வி - ம்.) பைம்பொற் கலத்திடைப் பாலடிசிலைப் பணிமகளிர் ஏந்தவும் நேர்ந்து நோக்கா நிலை செல்வச் சிறப்பைக் காட்டுகிறது.