பக்கம் எண் :

பதிகம் 20 

28 கோணைக் களிற்றுக் கொடித்தேரிவு ளிக்க டல்சூழ்
வாண்மொய்த்த தானை யவன்றம்பியுந் தோழன் மாரும்
பூண்மொய்த்த பொம்மன் முலையரும் புலந்து றப்ப
வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்ற வாறும்,

   (இ - ள்.) கோணைக் களிற்றுக் கொடித்தோர் இவுளிக் கடல்சூழ் வாள் மொய்த்த தானையவன் - மாறுபாடுடைய களிற்றையும் கொடித் தேரையும் குதிரைக் கடலையும் சூழ்ந்த வாளேந்திய காலாட் படையையுமுடைய சீவகனின்; தம்பியும் தோழன்மாரும் பூண்மொய்த்த பொம்மல் முலையாரும் புலம்துறப்ப - தம்பியும் தோழர் நால்வரும் பூண் அணிந்த விம்மிய முலைகளையுடைய தேவியர் எண்மரும் இந்நிலத்தை விட்டுத் துறக்கத்தை அடைய; வீணைக் கிழவன் விருந்து ஆர்கதிச் சென்ற ஆறும் - சீவகன் புதுமை பொருந்திய வீட்டினை அடைந்தபடியும்.

 

   (வி - ம்.) கோணை : ஐ : அசை.

 

   இவனை ஒழிந்தோர்க்கு வீடுபெற நல்வினையின்று, 'தென்புல மருங்கின் விண்டு நிறைய' (மதுரைக். 202) என்றாற் போலப் புலம் நிலம் ஆம்: ”ஏசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் - தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்” (சீவக. 3121) என்று ; தேவியரை முற்கூறி, 'ஐவருந், திருவின் தோற்றம்போல் தேவராயினார். ” (சீவக. 3134) என்று பிற்கூறுவாராகலின், முலையாருந் தம்பியுந் தோழன்மாரும் எனல்வேண்டும். ஆயினும், ஆண்பாற் சிறப்புடைமையின் முற்கூறினார். பாட்டுக் காமத்தை விளைத்தலின் அதிற் பற்றற்று விரைய வீடு பெற்றமை தோன்ற 'வீணைக் கிழவன் விருந்தார்கதிச் சென்றவாறும்' என்றார்.

( 23 )
29 தேன்வா யுமிழ்ந்த வமிர்துண்டவன் போன்று செல்வன்
வான்வாய் வணக்கும் நலத்தார்முலைப் போகம் வேண்டா
னேனோரு மேத்த வவனெய்திய வின்ப வெள்ளம்
மீனோர்க் குரைப்பாம் பதிகத்து ளியன்ற வாறே.

   (இ - ள்.) செல்வன் தேன்வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று - அழியாத செல்வத்தை உடையவன் தேனை உமிழ்தற்குக் காரணமான அமிர்தத்தை உண்டவனைப்போல; வான்வாய் வணக்கும் நலத்தார் முலைப்போகம் வேண்டான்- வானிடத்து மகளிரை அழகால் வணக்கும் நலமுடைய நில மகளிரின் இன்பத்தை வேண்டாதவனாய் ; ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம் - எல்லோரும் போற்ற அவன் அவ்வீட்டிலே கேவல மடந்தையை நுகர்ந்த பேரின்பத்தையும் ; பதிகத்துள் இயன்ற ஆறே ஈனோர்க்கு உரைப்பாம் - பதிகத்தில் அமைத்த வழியிலே இவ்வுலகில் உள்ளோர்க்கு உரைப்பாம்.

 

   (வி - ம்.) உமிழ்ந்த அமிர்து, 'நிலம் பூத்த மரம்' (கலி. 27) போல நின்றது.