பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 208 

நின்று - சீவகனின் நற்றாய் (சுநந்தை) பொற்கொடி போல வணங்கி நின்று; நனம்தலை உலகில் மிக்க நன்னுதல் மகளிர் - பரவிய இடமுடைய உலகிலே மேம்பட்ட விறல் மடந்தையும் புகழ் மடந்தையும் ; தங்கள் மனம் தளை பரிய - (இவனை அடையாமையால்) தங்கள் மனத்திற் குவிந்திருக்கும் வருத்தம் நீங்க; நின்ற மதலை மை ஆடுக என்று - இனி முறையே இருக்கின்ற மையோலை பிடிக்க என்று ; பூமகள் புலம்பி வைக உரைத்தாள் - திருமகள் தனித்திருக்கக் கூறினாள்.

 

   (வி - ம்.) இது சுநந்தையின் தொழிலாதலின் அவள் சான்றோரிடம் கூறினாள். செல்வச் செருக்கின்றிக் கலை கற்கவேண்டுமாதலின், 'பூமகள் புலம்பி வைக' என்றார். பல நூல்களைக் கற்கவே வெற்றியும் புகழுமுண்டாம் என்று, 'தளைபரிய மையாடுக' என்றனள்.

 

   இனி, இச்செய்யுளில் பூமகள் என்பதனை நிலமகள் என்று கொண்டு நோற்றும் பெற்றிலேன் என்று புலம்பிக்கிடக்க எனினுமாம். மையாடல் - மையோலை பிடித்தல் ; கற்கத் தொடங்குங்காற் செய்வதொரு சடங்கு. இதனை இக்காலத்தார் சுவடி தூக்கல் என்பர்.

( 338 )
368 முழவெனத் திரண்ட திண்டோண்
  மூரிவெஞ் சிலையி னானும்
அழலெனக் கனலும் வாட்க
  ணவ்வளைத் தோளி னாளு
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன்
  மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங்
  குமரியைப் புணர்க்க லுற்றார்.

   (இ - ள்.) முழவு எனத் திரண்ட திண்தோள் மூரி வெஞ்சிலையினானும் - முழவு போலத் திரண்ட திண்ணிய தோளையும் பெரிய கொடிய வில்லையும் உடைய கந்துகனும் ; அழல் எனக் கனலும் வாள்கண் அவ்வளைத் தோளினாளும் - நெருப்பெனக் கனலைச் சொரியும் வாளனைய கண்களையும் அழகிய வளைத்தோள்களையும் உடைய சுநந்தையும்; யாழ் மருட்டும் மழலைத் தீஞ்சொல் மதலைய - யாழையும் மருட்டும் இனிய மழலைச் சொற்களையுடைய சீவகச் சிறுவனுக்கு; மயில் அம் சாயல் குழைமுக ஞானம் என்னும் - மயிலனைய மென்மைத் தன்மையையும் குழையணிந்த முகத்தையுமுடைய கலை என்னும்; குமரியைப் புணர்க்கல் உற்றார் - கன்னியை மணமுடிக்கத் தொடங்கினர்.

 

   (வி - ம்.) 'குழைமுக ஞானமென்னுங் குமரி' என்பது 'குழையப் பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னுங் குமரி' என்னும் பொருளையும் தோற்றுவித்தது. குழைவு-அருள். கலை எப்போதும் அழிவற்றதாகலின்,