பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 209 

'குமரி' என்றார். [நச்சினார்க்கினியரோ, ”வேறு தன் கருத்தறிவார் இன்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியா திருத்தலின் 'குமரி' என்றார்” என்பர்.]

 

   'மதலையைக் குமரியைப் புணர்க்கலுற்றார்' என்பது, 'சாத்தனை நூலைக் கற்பிக்கலுற்றார்' என்றாற் போல நின்றது

( 339 )
369 அரும்பொனு மணியு முத்துங்
  காணமுங் குறுணி யாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப்
  பைம்பொன்செய் தவிசி னுச்சி
யிருந்துபொன் னோலை செம்பொன்
  னூசியா லெழுதி யேற்பத்
திருந்துபொற் கண்ணி யாற்குச்
  செல்வியைச் சேர்த்தி னாரே.

   (இ - ள்.) அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் பரந்த - அரிய பொன்னும் மணியும் முத்தும் பொற்காசும் குறுணி என்னும் அளவாகப் பரப்பிய ; எலாப் பிரப்பும் வைத்து - எல்லாப் பிரப்பரிசிகளையும் வைத்து ; பைம்பொன் செய் தவிசின் உச்சி இருந்து-புதிய பொன்னாலான இருக்கையின் மேலே ஆசிரியன் மாணவன் முதலியோர் அமர்ந்து ; திருந்து பொன் கண்ணியாற்கு - அழகிய பொன்மாலை அணிந்த சீவகனுக்கு ; பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி - பொன் ஓலையிலே பொன் ஊசியால் எழுதி ; செல்வியை ஏற்பச் சேர்த்தினார் - நாமகளை அவன் ஏற்குமாறு புணர்த்தனர்.

 

   (வி - ம்.) பிரப்பு-தெய்வத்திற்குப் படைத்தற்பொருட்டு ஒவ்வொன்றும் குறுணியளவிற்றாகக் கூடையிலிட்டு வைக்கும் பொன் அரிசி முதலியன, ”சில்பலிச் செய்து பல்பிரப்பு இெரீஇ” (234) என்றார், திருமுருகாற்றுப்படையினும். ஆசிரியன் முதலியோர் என எழுவாய் வருவித்தோதுக. மனங்கொள்ளும்வகை என்பார் ஏற்ப என்றார். கண்ணியான் : சீவகன். செல்வி - நாமகள்.

( 340 )
370 நாமக ணலத்தை யெல்லா
  நயத்துடன் பருகி நன்னூ
லேமுத லாய வெல்லாப்
  படைக்கலத் தொழிலு முற்றிக்
காமனுங் கனிய வைத்த
  புலங்கரை கண்டு கண்ணார்
பூமகள் பொலிந்த மார்பன்
  விமிசைத் திலக மொத்தான்.