(வி - ம்.) தீவினை கழிய நின்ற நெறியைச் 'சன்மார்க்கம்' என்றும், இன்ப நிறைகடலை, 'அனந்தசுகம்' என்றும் வடநூல்கள் கூறும். 'நிறைக்கடல்' என்று பாடமாயின் இன்பப் பெருக்கினையுடைய கடல் என்க.
(இ - ள்.) கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து-கூற்றுவன் கொடுமையுடையவனாகிக் கொலைத் தொழிலுக்குரிய கருவிகளை ஆராய்ந்து; மாற்ற அரும் வலையை வைத்தான்-நீக்க முடியாத வலையை வைத்துள்ளான்; வைத்ததை நாமும் அறிந்து நோற்று - அதனை அறிவுடைய நாமும் அறிந்து தவம்புரிந்து; அவன் வலையை நீங்கி - அவன் வலைக்குத் தப்பி; நுகர்ச்சிஇல் உலகம் நோக்கி - இதற்குமுன் துய்த்தறியாத உலகமான வீட்டை நோக்கி; ஆறு உறப்போதல் தேற்றாம் - வழிக்கொண்டு செல்லுதலைத் தெளியோம் ; அளியம் ஓஒ பெரியம் காண் -இரங்கத் தக்க நாம் பெரியோம் காண்.
(வி - ம்.) கருவி : ஐயும் பித்தும் வளியும் ஆகிய (வலைகட்டும்)வார்கள். வலை : வாழ்நாளைத் தரும் வினை. ஓஒ பெரியம்: இகழ்ச்சி.