பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 215 

   (இ - ள்.) பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்ஆர் அமிர்து அரிதின் பெற்றாம் - பெரும் துன்பங்களை யெல்லாம் நீக்கற்குக் காரணமான, பிறப்பினைப் போக்குகின்ற நிறைந்த அமிர்தமான மக்கள் யாக்கையை அருமையாக அடைந்தோம்; அதன் பயன் கோடல் தேற்றாம் - எனினும் அவ்வுடம்பின் பயனைக் கொள்ள அறிகின்றிலேம்; ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உளபகல் கழிந்த பின்றை - ஆராய்கின்ற ஐம்பொறிகளையும் ஐம் புலன்களாலே பேணி நமக்குரிய நாளெல்லாம் கழிந்த பிறகு ; கூர் எரி கவரும் போழ்தின் குறித்த எல்லாம் கூடுமோ? - மிக்க நெருப்பு நம் யாக்கையைப் பற்றும் பொழுது நினைத்த அறம் யாவும் செய்யக் கூடுமோ ?

 

   (வி - ம்.) அமிர்து : ஆகுபெயர்; பிறவிப்பிணி போக்கலான்மக்கன் யாக்கையை அமிர்து என்றார். பிளந்திடும் அமிர்து, நீக்கும் அமிர்து எனத் தனித்தனி கூட்டுக. ஓரும் என்னும் செய்யும் என்முற்று முன்னிலைக்கண் வாராமையான் ஓரும் எனப் பிரித்து ஓர்ந்து பாரும் என்று பொருள் கோடல் நேரிதன்று.

( 348 )
378 தழங்குரன் முரசிற் சாற்றித்
  தத்துவந் தழுவல் வேண்டிச்
செழுங்களி யாளர் முன்ன
  ரிருளறச் செப்பி னாலு
முழங்கழ னரகின் மூழ்கு
  முயற்சிய ராகி நின்ற
கொழுங்களி யுணர்வி னாரைக்
  குணவதங் கொளுத்த லாமோ.

   (இ - ள்.) தத்துவம் தழுவல்வேண்டி-எல்லோரும் உண்மையைப் பற்றல் வேண்டி; செழுங்களியாளர் முன்னர் தழங்குகுரல் முரசின் சாற்றி இருள் அறச் செப்பினாலும்-முழங்கும் ஒலியுறு முரசினைப் போலத் தெளிவாக மயக்கம் நீங்கச் செப்பினாலும்; முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகிநின்ற-முழங்கும் அழலையுடைய நரகிலே முழுகும் முயற்சியுள்ளவராகி நிற்கின்ற; கொழுங்களி உணர்வினாரை-மிகுந்த மயக்க வுணர்வினரை; குணவதம் கொளுத்தலாமோ?- பண்பாகிய விரதத்திலே ஈடுபடுத்த முடியுமோ? (முடியாது).

 

   (வி - ம்.) தழங்கு குரல் ; தழங்குரல் என விகாரப்பட்டது. செழுங்களி : தரிசன மோகனீயப் பிரகிருதிகள் ஏழும். அவை : அநந்தானுபந்திக் குரோதம், அநந்தானு பந்திமானம், அநந்தானுபந்தி மாயை, அநந்தானுபந்தி லோபம், மித்தியாத்துவம் , ஸம்மியக்மித்தியாத்துவம், ஸம்மியக்துவப் பிரகிருதி என்பன. இவை நகர கதியிற் செலுத்தும். குணவதம் : வதம்-விரதம்; பகுதிப் பொருள் விகுதி.

( 349 )