பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 216 

379 பவழவாய்ச் செறுவு தன்னு
  ணித்திலம் பயில வித்திக்
குழவிநா றெழுந்து காளைக்
  கொழுங்கதி ரீன்று பின்னாக்
கிழவுதான் விளைக்கும் பைஞ்கூழ்
  கேட்டிரேற் பிணிசெய் பன்மா
வுழவிர்காண் மேயுஞ் சீல
  வேலியுய்த் திடுமி னென்றான்.

   (இ - ள்.) உழவிர்காள் - வாழ்க்கை உழவர்களே! ; பவழ வாய்ச் செறுவு தன்னுள் - பவழவாய் என்னும் கழனியிலே; நித்திலம் பயில வித்தி - முத்தினைப் பொருந்த வித்துதலால்; குழவி நாறு எழுந்து - குழவியாகிய நாற்றுத் தோன்றி; காளைக் கொழுங்கதிர் ஈன்று-காளைப் பருவமாகிய வளமிகு கதிரை நல்கி; பின்ஆ கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேல் - பின்னாக முதுமையை விளைவிக்கும் பயிரைப்பற்றிக் கேட்டீராயின்; பிணி செய் பன்மா மேயும்-நோயைச் செய்யுந் தீவினைகளாகிய பல விலங்குகள் அப்பயிரை மேய்ந்திடும்; சீல வேலி உய்த்திடுமின் என்றான்-அவை மேயாதவாறு ஒழுக்கமாகிய வேலியைக் கொண்டு சென்று அமைப்பீர்களாக என்று கூறினான்.

 

   (வி - ம்.) பவழவாய் : கருத்தங்கும் பை : நித்திலம் :முத்துப் போன்ற விந்து.

 

   செறுவு - கழனி. நித்திலம் போன்ற வித்தினை வித்தி என்க. பயனீனும் பருவமாதலால் காளைக் கொழுங்கதிர் என்றார். சீலம்-”தீந்தேனும் தெண்மட்டும் உயிர்க்குழாம் ஈண்டி நிற்றற்கு இடனாகும் ஊனும் இவை துறத்தல்”.

 

   ”ஊன்சுவைத்து ஒளிறும் வேலாற்கு உரைக்கலுற்றான்” (373) என்று தொடங்கினர் ஆயினும் சீவகனோடிருந்த ஏனை மாணவரையும் உளப்படுத்தி உழவிர்காள் என்று விளித்தமைக்கு ஏற்ப உய்த்திடுமின் எனப் பன்மை கூறினார். ”இளையவர் குழாத்தினீங்கி” (383) என்பர் பின்னரும்

( 350 )
380 சூழ்கதிர் மதிய மன்ன
  சுடர்மணிப் பூணி னானும்
வீழ்தரு கதியி னீங்கி
  விளங்குபொன் னுலகத் துய்க்கு
மூழ்வினை துரத்த லானு
  முணர்வுசென் றெறித்த லானு
மாழ்கடற் புணையி னன்ன
  வறிவரன் சரண டைந்தான்.