பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 217 

   (இ - ள்.) வீழ்தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும் ஊழ்வினை துரத்தலானும் - நரகிடை விழுதற்குக் காரணமான தீவழியிலிருந்து விலகி, விளங்குகின்ற பொன்மதிலையுடைய சமவசரணம் என்னும் அருகன் கோயிலிலே செலுத்தும் ஊழ்வினை தூண்டுவதாலும்; உணர்வு சென்று எறித்தலானும் - உணர்ச்சி சென்று திரும்பவும் அதன் மேற்பரவுதலானும்; ஆழ்கடல்புணையின் அன்ன அறிவரன் சரணடைந்தான் - ஆழமாகிய கடலுக்குத் தெப்பம் போன்ற அறிவனைச் சரண் என்று சேர்ந்தான்.

 

   (வி - ம்.) கலைகள் நிறைதலாற் சீவகனுக்கு மதியுவமை. பூணினானும் : உம் : உயர்வு சிறப்பு. பொன்னுலகு: பொன்னெயில் வட்டம் ; [சமவ சரணம் என்னும் சினாலயம்.] ஊழ்வினை : சாது சரண் ஆவதற்கு முன் செய்த நல்வினை. அத் தவத்தே பயின்றமையால், உணர்வு மீண்டும் அதன் மேற் சென்று பரவியது.

( 351 )
381 காட்சிநன் னிலையின் ஞானக்
  கதிர்மணிக் கதவு சோ்த்திப்
பூட்சிசா லொழுக்க மென்னும்
  வயிரத்தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிக ளெல்லா
  மடைத்தபின் வரம்பி லின்பத்
தாட்சியி லுலக மேறத்
  திறந்தன னலர்ந்த தாரான்.

   (இ - ள்.) அலர்ந்த தாரான் - மலர்ந்த மாலையான் ; காட்சி நன்னிலையில் - காட்சியாகிய நிலையிலே; கதிர்மணிக் கதவு சேர்த்தி - அறிவாகிய கதவைச் சேர்த்து; பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத்தாழ் கொளுவி - மேற்கொண்டிருக்கும் ஒழுக்கமாகிய வயிரத்தாழைப் பொருத்தி; பொல்லா மாட்சிஇல் கதிகள் எல்லாம் அடைத்தபின் - தீய இழிந்த நெறிகளையெல்லாம் அடைத்தபிறகு; ஆட்சி இல் வரம்பு இல் இன்பத்து உலகம் ஏறத் திறந்தனன் - இதற்குமுன் ஆண்டிராத, எல்லையற்ற இன்பத்தையுடைய வீட்டுலகிற்குச் செல்ல வழி திறந்தான்.

 

   (வி - ம்.) நிலையாக இருப்பதால் நிலை. பொருள்களைக் காத்தற்கு உலாவுதலிற் கதவு. காட்சியையும் ஞானத்தையும் விட்டு நீங்காமல் தகைத்தலின் தாழ். 'அலர்ந்த-புகழாற் பரந்த' என்றுமாம்.

 

   காட்சி - நற்காட்சி. ஞானம்- நன்ஞானம். பூட்சி - மேற்கோள். ஒழுக்கம் - நல்லொழுக்கம். எனவே இரத்தினத்திரயம் ஆயிற்று. துன்பமல்லது தொழுதகவின்மையின் பிறப்பினை மாட்சியில்கதி என்றார்.

( 352 )