பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 218 

382 நல்லறத் திறைவ னாகி
  நால்வகைச் சரண மெய்தித்
தொல்லறக் கிழமை பூண்ட
  தொடுகழற் காலி னாற்குப்
புல்லற நெறிக்கண் நின்று
  பொருள்வயிற் பிழைத்த வாறு
மில்லறத் தியைபு மெல்லா
  மிருளறக் கூறி யிட்டான்.

   (இ - ள்.) நல் அறத்து இறைவன் ஆகி - நல்லஅறத்திற்கு உரியவனாகி ; நால்வகைச் சரணம் எய்தி - நால்வகைச்; சரணங்களையும் அடைந்து ; தொல் அறக்கிழமை பூண்ட தொடுகழற் காலினாற்கு - பழமையான தன் குலத்திற்குரிய அறத்திற்கு உரிமை யேற்ற கழலணிந்த காலினானுக்கு ; புல் அற நெறிக்கண் நின்று பொருள்வயின் பிழைத்தவாறும் - தீநெறி செல்வோர் தாம் நடத்திய இழிந்த இல்லற நெறியாலே வீடுபேற்றை இழந்த படியும்; இல்லறத்து இயல்பும்-வீடுபேறு தப்பாமல் இல்லறம் நடத்தும் இயல்பும் ; எல்லாம் இருள் அறக் கூறியிட்டான் - பிறவற்றையும் மயக்கம் நீங்க விளம்பினான.

 

   (வி - ம்.) நால்வகைச் சரணம் : அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம்.

 

   இதனால், தேவர் இல்லறத்திலிருந்தே வீடுபேறெய்துதல் கூடும் என்னும் கொள்கையுடையராதல் உணரலாம். இக்கொள்கை,

 
  ”சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்  
   சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள்  
  பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின்  
   பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ  
  ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள் அரி வையரோடு  
   அநுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்  
  நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும்  
   நுழைவர் பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே”. (சிவ. சித். சுப. 287)  

   எனவரும் சைவசமயக் கொள்கையையே ஒத்திருத்தல் உணர்க.

( 353 )
383 எரிமுயங் கிலங்கு வைவே
  லிளையவர் குழாத்தி னீங்கித்
திருமுயங் கலங்கன் மார்பிற்
  சீவகற் கொண்டு வேறா