பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 221 

386 விலங்கிழை சிறுவன் றன்னைப்
  பயந்துபூந் தவிசி னுச்சி
நலம்புரி நங்கை வைத்து
  நல்லறங் காக்க வென்றாள்.

   (இ - ள்.) தேவி புலம்பொடு போகிப் புகற்கு அருங்காடு நண்ணி - விசயை வருத்தத்துடன் சென்று மக்களாற் புகுதற் கரிய சுடுகாட்டை அடைந்து; வலம்புரி உலகம் விற்கும் மாமணி ஈன்றது என்ன - வலம்புரிச் சங்கு உலகை விலைகொள்ளும் பெரிய முத்தினைப் பெற்றாற் போல ; இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து - விளங்கும் அணிகலனுடைய மகனைப் பெற ; நலம்புரி நங்கை பூந்தவிசின் உச்சி வைத்து - அறம் விரும்பிய கூனியாகிய தெய்வம் அம் மகனை அழகிய தவிசின் மேல் வைக்க ; நல் அறம் காக்க என்றாள் - விசயை நான் மேற் செய்யும் நோன்பு என் மகனைக் காப்பதாக என்று மனங் கொண்டாள்.

 

   (வி - ம்.) வலம்புரி உவமை கூறவே தேவி மறைந்தமையும் உணர்த்தினார். விசயை நோன்பிலே யிருந்தமை ஆசிரியனாற் சீவகன் ஈண்டுணர்ந்தும் மேல் 'அடிகளும் உளரோ?' (சீவக - 1884) என்று இவன் கூறியது இதற்குப் பின்னரும் தீங்கின்றி யிருந்தமை கருதிப் போலும்.

( 357 )
387 வானத்தின் வழுக்கித் திங்கட்
  கொழுந்துமீன் குழாங்கள் சூழக்
கானத்திற் கிடந்த தேபோற்
  கடலக முடைய நம்பி
தானத்து மணியுந் தானு
  மிரட்டுறத் தோன்றி னானே
யூனத்திற் றீர்ந்த சீர்த்தி
  யுத்திரட் டாதி யானே.

   (இ - ள்.) திங்கள் கொழுந்து வானத்தின் வழுக்கி - திங்களின் கொழுந்தாகிய பிறை வானத்திலிருந்து தவறி; மீன் குழாங்கள் சூழ - மீன் கூட்டங்கள் சூழ; கானத்தில் கிடந்ததே போல் - காட்டிற் கிடந்ததைப் போல ; கடல் அகம் உடைய நம்பி - கடல் சூழ்ந்த வுலகத்தையுடைய நம்பி ; ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியான் - குற்றமற்ற சிறப்புடைய உத்திரட்டாதியிற் பிறந்தவன்; தானத்து மணியும் தானும் இரட்டுஉற - அந்த இடமாகிய சுடுகாட்டில் உள்ள மணிகளும் தானும் வேறுபட்டு விளங்க; தோன்றினான் - காண்குற்றான்.