பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 231 

   (இ - ள்.) நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம் - நிலத்தினாற் கொள்ள வியலாத மிகுதியான செம் பொன் நிதியை உடைய நின் தந்தையின் இல்லம்; பொறுக்கலாத நலம் பிண்டி நான்முகன் தமர்கட்கு எல்லாம் - அளவற்ற நலந்தரும் அசோகின் நீழலில் அமர்ந்த அருகன் அடியவர்கட்கு எல்லாம் இல்லம்; ஆதலால், ஊடு புக்கேன் - ஆகையால், (தடையின்றி) உள்ளே சென்றேன்; உலம் பொறுக்கலாத தோளாய் - கற்றூணும் தாங்காத திண்ணிய தோளனே!; கலம் பொறுக்கலாத சாயலவருழை நின்னைக் கண்டேன் - அணியைத் தாங்க வியலாத மென்மையுடைய மகளிரிடையே நின்னைப் பார்த்தேன்.

 

   (வி - ம்.) நிதி - திரள். எல்லா மூர்த்தமும் இவனாதலின், 'நான் முகன்' என்றார். மேலும், 'ஆதிவேதம் பயந்தோய் குநீ (சீவக. 1242) . 'மலரேந்து சேவடிய மாலென்ப' (சீவக. 1610) என்பர்.

 

   இல்லம் என்பதனைத் தமர்கட்கெல்லாம் என்பதன் பின்னரும் கூட்டுக.

( 373 )
403 ஐயனைக் கண்ணிற் காண
  யானைத்தீ யதகங் கண்ட
பையண னாகம் போல
  வட்கயான் பெரிது முட்கித்
தெய்வங்கொ லென்று தோ்வேற்
  கமிர்துலாய் நிமிர்ந்த தேபோன்
மொய்குரன் முரச நாணுந்
  தழங்குரன் முழங்கக் கேட்டேன்.

   (இ - ள்.) ஐயனைக் கண்ணின் காண - நின்னைக் கண்ணாற் கண்டேனாக; அதகம் கண்ட பை அணல் நாகம் போல யானைத்தீ வட்க - மருந்தினைக் கண்ட படத்தையும் அணலையுமுடைய பாம்பின் நஞ்சு நீங்குதல் போல யானைத்தீ கெடுதலாலே; யான் பெரிதும் உட்கித் தெய்வங்கொல் என்று தேர்வேற்கு - யான் மிகவும் அஞ்சித் தெய்வமோ என்று ஆராய்வேற்கு; அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் - அமிர்து நிமிர்ந்து உலாவியதுபோல்; மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன் - செறிந்த ஒலியுடைய முரசம் நாணுமாறு ஒலிக்கும் மொழி முழங்கக் கேட்டேன்.

 

   (வி - ம்.) 'ஐய நிற்கண்ணின்' என்றும் பாடம் (இப் பாடமே தக்கது.) 'தெய்வமோ' என்று ஐயுற்றபோது, 'மகனே யென்று தெளியக் குரல் முழங்கக் கேட்டேன்' என்றான். அதகம்-மருந்து. இஃது அகதம் என்றும் வழங்கும் எனத் தெரிகிறது. 'எரிதழல் விடத்தை-மலைமறை