பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 234 

407 பைவிரி யல்கு லாட்கும்
  படுகடல் நிதியின் வைகும்
மைவரை மார்பி னாற்கு
  மனமுறத் தேற்றி யிட்டான்.

   (இ - ள்.) கைவரை அன்றி நில்லாக் கடுஞ்சின மடங்கல் அன்னான் - ஒழுககத்தின் எல்லை கடவாத, கொடிய சீற்றமுடைய சிங்கம் போன்றவன்; தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்தகத்து எழுதி - தன் பகைவரை அழிக்கும் முறைமையை அவன் மனத்திலே கொள்ளுமாறு உருவாக்கி; செம்பொன் பைவிரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் மைவரை மார்பினாற்கும் - மேகலை அணிந்த அல்குலையுடைய சுநந்தைக்கும் கடல் போற் கிடக்கும் செல்வத்திலே தங்கிய, முகில் தங்கிய மலையனைய மார்பினான் கந்துகனுக்கும்,; மனம் உறத் தேற்றி யிட்டான் - உள்ளத்திற் பொருந்துமாறு (தன் துறவைத்) தெளிவித்திட்டான்.

( 378 )
408 அழலுறு வெண்ணெய் போல
  வகங்குழைந் துருகி யாற்றாள்
குழலுறு கிளவி சோர்ந்து
  குமரனைத் தமிய னாக
நிழலுறு மதிய மன்னாய்
  நீத்தியோ வெனவு நில்லான்
பழவினை பரிய நோற்பான்
  விஞ்சையர் வேந்தன் சென்றான்.

   (இ - ள்.) குழல் உறு கிளவி அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள் சோர்ந்து - குழலனைய இனிய மொழியாள் (அவன் மொழி கேட்டு) தீயிற்பட்ட வெண்ணெய் போல உள்ளம் குழைவுற்று உருகிப் பொறாதவளாய்ச் சோர்வுற்று; நிழல் உறும் மதியம் அன்னாய் - ஒளி விடுந் திங்களைப் போன்றவனே!; குமரனைத் தமியன் ஆக நீத்தியோ எனவும் - சிறுவனைத் தனியனாம்படி துறந்தனையோ என்று வேண்டவும்; விஞ்சையர் வேந்தன் நில்லான் பழவினை பரிய நோற்பான் சென்றான் - விஞ்சையர் மன்னன் நில்லாதவனாகிப் பழைய வினை தீருமாறு தவஞ் செய்வதற்குச் சென்றான்.

( 379 )

நாமகள் இலம்பகம் முற்றிற்று.