பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 24 

   பெயரிட்டனன். சுநந்தை பின்னர் நந்தட்டன் என்னும் ஒரு மகவினை ஈன்றாள்.

 

   இனி, விசயையை முன்கூறப்பட்ட தெய்வம் அழைத்துப் போய்த் தண்டகாரணியத்தே சென்று ஆண்டுமறையும் துறவோருடன் கூட்டிய பின்னர் மறைந்தது. விசயை அவணிருந்து தன் மகவின் நலங்கருதி நோன்பு செய்திருந்தனள்.

 

   கந்துக்கடன் சீவகன் நந்தட்டன் முதலியோரை நல்லாசிரியரிடத்துக் கலைகள் பலவும் பயிற்றுவித்தான். அச்சணந்தி என்னும் அப்பேராசிரியர் சீவகனுடைய நுண்மாணுழைபுலனை உணர்ந்து மகிழ்ந்தனர். சீவகனைத் தனியிடத்தே அழைத்துச் சென்று ஒரு கதை கூறுவார்போன்று அவனது வரலாற்றை உணர்த்தினர். பின்னரும், “ஓராண்டு முடியுமளவும் நீ நின்னை வெளிப்படுத்தாதே இருத்தல் வேண்டும், “ என்றும் வற்புறுத்தி வரங்கொண்டனர்.

 

   அச்சணந்தியாசிரியர் தம் வரலாற்றையும் சீவகனுக்குணர்த்தி அவன்பால் விடைபெற்றுப் போய்த் தவம் செய்து வீடுபெற்றுயர்ந்தனர். இராசமாபுரத்தில் சீவகன், நந்தட்டன் முதலியவரோடு வைகுவானாயினன்.

 

நாட்டு வளம்

 
30 நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற்
பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும்
பாவீற் றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக்
கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன்.

   (இ - ள்.) பா வீற்றிருந்த கலை பாரறச் சென்ற கேள்விக்கோ-பாக்களில் வீற்றிருந்த கலைகள் தடையின்றி நடந்த கேள்வியையுடைய அரசன் ; நா வீற்றிருந்த புலமாமகளோடு - தன் நாவிலே வீற்றிருந்த அறிவைத் தரும் நாமகளோடு; நன் பொன் பூ வீற்றிருந்த திருமாமகள் நாளும் புல்ல - அழகிய பொற்றாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் வெறுப்பின்றி நாள்தோறும் தழுவ ; வீற்றிருந்த குடி நாட்டணி கூறல் உற்றேன் - தான் வீற்றிருந்த, குடிகள் நிறைந்த நாட்டின் அழகைக் கூறத் தொடங்குகின்றேன்.

 

   (வி - ம்.) ‘கேள்விக்கோ‘ எனவே , கல்வியும் செல்வமும் பெற்றனவேனும், அவை நாடோறும் புதியவாக நிகழ்கின்றமை தோன்றப் பின்னும் ‘புல்ல‘ என்றார்.

 

   இனி, அவர்கள் (நாமகளும் திருமகளும்) நாட்டிலே புல்ல என்றும் ஆம்.